» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா? ரிசர்வ் வங்கி விளக்கம்

சனி 22, பிப்ரவரி 2020 10:36:28 AM (IST)

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என்று வெளியாகி வரும் செய்திகளுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மத்திய அரசு 2016-ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக 2 ஆயிரம், 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. இதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதற்கு சில்லரை கிடைப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் மார்ச் 1-ந்தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்பப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ள ‘டிரே’ நிரப்பப்படாது என்று தகவல்கள் பரவி வருகிறது. ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என எடுத்தால் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே வருகிறது. இதனை சில்லரையாக மாற்ற மக்கள் வங்கிக்கு வருகிறார்கள். இதனால் ஏ.டி.எம். கொண்டுவந்ததன் நோக்கமே சிதைகிறது. இதனால்தான் ஏ.டி.எம்.மில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் உறுதி செய்யாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பி.டி.கிரு‌‌ஷ்ணன் கூறியதாவது: ஊழலையும், கருப்பு பணத்தையும் ஒழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு மத்திய அரசு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொண்டுவந்தது. ஆனால் அந்த நோட்டை மாற்றுவது என்பது பொதுமக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஆனால் பயன்பாட்டை படிப்படியாக குறைக்கப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதனை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory