» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏப்.15 முதல் ரயில்கள் சேவை படிப்படியாக தொடக்கம்? பயணிகளுக்கு முக கவசம் கட்டாயம்!

திங்கள் 6, ஏப்ரல் 2020 6:02:29 PM (IST)வருகிற 15-ம் தேதி முதல் ரயில்கள் சேவை படிப்படியாக தொடங்கப்படும் எனவும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

 கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி விமானம், ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு உத்தரவு வருகிற 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 15-ம் தேதியில் இருந்து விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதேப்போல ரயில் சேவையும் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தொடங்கப்படுகிறது. ரயில்வே ஏற்கனவே முன்பதிவை தொடங்கிவிட்டது.

ரயில் சேவையை படிப்படியாக தொடங்க ரயில்வே முடிவு செய்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் குறைந்துள்ள பகுதிகளில் இருந்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகுதியில் இருந்தும் ரயில்களை முதலில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ரயில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது;-கொரோனா வைரசால் நாடு நெருக்கடியான கால கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் வருவாயை பெருக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. பயணிகளின் பாதுகாப்பிலும், நோய் தொற்று மேலும் பரவவில்லை என்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

ரயில் சேவையை மீண்டும் எப்போது தொடங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசின் அனுமதி கிடைத்தவுடன் ரயில்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ள பகுதிகளில் அதாவது ஊரடங்கு தளர்த்தப்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும். ரயில்களை மீண்டும் இயக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து வருகிறோம். ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தால் ரயில்நிலையங்களில் கூட்டம் அதிகரித்து நோய் பரவலுக்கு வழிவகை செய்யும்.

எனவே ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முதலில் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முக கவசம் அணிவது, சமூக இடை வெளியை பின்பற்றுவது என பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும் பயணிகள் உடல் நலம் குறித்து ஆரோக்கிய செயலியில் ஆய்வு செய்யப்படும். அதோடு மட்டுமல்லாமல் ரயில் பெட்டிகளில் முறையாக கிருமி நாசினி தெளித்து தூய்மையைப் பராமரிப்பதும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory