» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வியாழன் 28, மே 2020 4:34:43 PM (IST)புலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு தழுவிய பொது ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை வழியாக நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதில் பலர் விபத்து மூலமாக இறந்தனர். சிலர் பசியால் உயிரிழந்தனர். இதனால் கடந்த 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஆனால் ரயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்களிடம் பணம் கேட்பதாகவும், சரியாக உணவு வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது.

உச்சக்கட்டமாக பீகார் மாநில ரயில் நிலையம் வருவதற்கு சற்று முன் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்தது கூட தெரியாமல் அவரின் குழந்தை அவரை எழுப்ப முயன்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில் புலம்பெயர் தொழிலாளர்கள் கஷ்டப்படுவதை கண்ட உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்த விசாரணை மேற்கொண்டது. அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா? ரயில் செலவை ஏற்பது யார்? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இன்று புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விசாரணை நடைபெற்றபோது, புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு தேவை, டிக்கெட்டுக்கான பணத்தை தொழிலாளர்கள்தான் செலுத்த வேண்டுமா?. உணவு வழங்குவது யார்? பசியோடு செல்லக்கூடாது என்பதை யாராவது கண்காணிக்கிறார்களா? தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சேர இன்னும் எத்தனை நாட்களாகும்? என கேள்விகளை தொடுத்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ‘‘புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்கின்றன. உணவு மற்றும் குடிநீரும் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் முழு வீச்சில் செயல்படுகின்றன. 187 ரயில்கள் மூலம் ஒரு நாளுக்கு மொத்தம் 1.85 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்’’ எனத் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் விளக்கத்தைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து பயணக் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதற்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory