» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரள தங்கம் கடத்தல் வழக்கு; சொப்னா உள்பட 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

புதன் 12, ஆகஸ்ட் 2020 5:38:49 PM (IST)

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா உள்பட 3 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா, சரித்குமார் உள்பட இதுவரை 14 பேரை சுங்க இலாகாவினர் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய நபர்களான முகமது அன்வர், ஷமீம், ஜிப்சல் ஆகியோர் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி அசோக் ேமனோன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் நிரபராதிகள். இவர்களுக்கு எதிராக ‘உபா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இவர்களை ஜாமீனில் விடுவிக்க ேவண்டும்’’ என்றார். 

சுங்க இலாகா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘முகமது அன்வர் தங்கம் உள்பட மிகப்பெரிய கள்ளக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர். தங்கம் கடத்த பலரிடம் இருந்தும் ஹவாலா பணத்தை திரட்டி உள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்ட செய்யது அலவியிடம் நடத்திய விசாரணையில், அன்வருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. முகமது அன்வரை ைகது செய்து நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான ஷமீம், ஜிப்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

ஷமீமும், ஜிப்சலும் வியாபார பங்குதாரர்கள். தங்கம் கடத்தலுக்கும், அதற்கான சதி திட்டத்திலும் தங்களுக்குள்ள பங்கு குறித்து இவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஹவாலா பணத்தை திரட்டி வெளிநாட்டுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தங்கம் வாங்கி தூதரக பார்சல் வழியாக இந்தியாவுக்கு கடத்தி உள்ளனர். இது மிகப்பெரிய குற்றம் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு பெருமளவில் தங்கம் கடத்துவதில் மேலும் பல கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனவே கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அட்டாஷே ராஷித் கமிஸ் அல்சலாமி பெயரில் துபாயில் இருந்து ஒரு பார்சல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் இருப்பதாகவும் எங்களுக்கு விபரம் கிடைத்தது. இந்திய வெளியுறவுத்துறை சட்டத்துக்கு புறம்பாக இந்த பார்சல் கொண்டு வரப்படுகிறது எனவும், அதில் சட்டப்படி இருக்க வேண்டிய கையெழுத்து எதுவும் இல்லை எனவும் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து சட்ட விதிமுறைகளையும் பின்பற்றி அந்த பார்சலை திறக்க நாங்கள் தீர்மானித்தோம். அப்போது ரூ.14 கோடியே 82 லட்சத்து 10 மதிப்புள்ள 30.244 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரித்குமார், சொப்னா, சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்’’ என்றார். இதையடுத்து சொப்னா உள்பட 3 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.

சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோரின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது கூடுதல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 5 நாட்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory