» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட்’ தேர்வில் 56.44 சதவீதம் பேர் தேர்ச்சி: ஒடிசா, டெல்லி மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்து சாதனை

சனி 17, அக்டோபர் 2020 8:23:22 AM (IST)

நீட் தேர்வில் 56.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைவு ஆகும். ஒடிசா, டெல்லியை சேர்ந்த மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு இடையே தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நீட் தேர்வை நடத்தியது. கடந்த மாதம் 13-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வை 13 லட்சத்து 66 ஆயிரத்து 945 பேர் எழுதினார்கள்.

தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 99 ஆயிரத்து 610 பேர் தேர்வு எழுதினார்கள். கொரோனாவால் நீட் தேர்வை தவற விட்டவர்களுக்கு கடந்த 14-ந் தேதி தனியாக தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 290 பேர் எழுதினார்கள். இந்த நிலையில், ‘நீட்’ தேர்வு முடிவு நேற்றிரவு 7 மணியளவில் தேசிய தேர்வு முகமை இணையதளமான www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகியவற்றில் வெளியானது.

ஆனால் ஒரே நேரத்தில் அனைவரும் தேர்வு முடிவை பார்ப்பதற்கு முயற்சி செய்ததால் அந்த இணையதளம் முடங்கியது. இதனால் மாணவ-மாணவிகள் உடனடியாக தேர்வு முடிவை பார்க்க முடியாமல் அவதி அடைந்தனர். பின்னர் மெல்ல, மெல்ல இணையதளம் சரியானது.

தேர்ச்சி முடிவில் நீட் தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 556 மாணவர்களும், 4 லட்சத்து 27 ஆயிரத்து 943 மாணவிகளும், 3-ம் பாலித்தனவர் ஒருவரும் அடங்குவர்.

இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 56.44 ஆகும். கடந்த ஆண்டு 56.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி 0.06 சதவீதம் குறைந்துள்ளது.

நீட் தேர்வு முடிவில், பொதுப்பிரிவினரில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 952 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 3 லட்சத்து 59 ஆயிரத்து 447 பேரும், எஸ்.சி. பிரிவில் 98 ஆயிரத்து 809 பேரும், எஸ்.டி. பிரிவில் 33 ஆயிரத்து 848 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரில் 57 ஆயிரத்து 444 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

பொது பிரிவினர்களுக்கு 147 மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு 113 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

இந்தியாவில் நீட் தேர்வில் ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், டெல்லியை சேர்ந்த மாணவி அகங்ஷா சிங் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று 2-ம் பிடித்தை பிடித்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவி தும்மாலா ஸ்நிகிதா 715 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் வினித் சர்மா 715 மதிப்பெண்கள் பெற்று 4-வது இடத்தையும், அரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவி அம்ரிஷா கைத்தான் 715 மதிப்பெண்கள் பெற்று 5-வது இடத்தையும் பிடித்தனர்.

8-வது இடத்தில் தமிழக மாணவர்

8-வது இடத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்.ஸ்ரீஜன் என்ற மாணவர் 710 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதிகம் மதிப்பெண் பெற்ற முதல் 40 பேரில் 28 மாணவர்கள், 12 மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஸ்ரீஜன் மட்டும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory