» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்பு? ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்!

வியாழன் 19, நவம்பர் 2020 8:56:03 AM (IST)

ரூ.10 கோடி அபராதம் செலுத்தியதை அடுத்து சசிகலா தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோருவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறிய நிலையில், தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை அப்படியே முழுமையாக சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு, அபராத தொகையை செலுத்தினால் சசிகலா வருகிற ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு காலம் அவர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றும் சிறை நிர்வாகம் பதிலளித்தது. இந்த நிலையில் அபராத தொகையை செலுத்தும் பணிகளை சசிகலா தரப்பினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கினர்.

அதன்படி சொத்து குவிப்பு வழக்கில் அபராதத்தை செலுத்த அனுமதிக்குமாறு அவர்கள் ஒரு மனுவை பெங்களூரு தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக்கொண்ட தனிக்கோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அபராதத்தை செலுத்த அனுமதி வழங்கியது. இந்த நிலையில் சசிகலா தரப்பு வக்கீல் முத்துக்குமார் நேற்று முன்தினம் அபராதம் செலுத்துவதற்கான ஆவணங்களை பெங்களூரு தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான வரைவோலையை வக்கீல்கள் ராஜசெந்தூர்பாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் வழங்கினார். அதாவது இந்த தொகை 4 வரைவோலைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

அதாவது, பழனிவேல் என்பவரின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் இருந்து ரூ.3.25 கோடி, வசந்தாதேவி என்பவரின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் இருந்து ரூ.3.75 கோடியும், ஹேமா என்பவரின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 கோடியும், விவேக் என்பவரின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 ஆயிரமும் வரைவோலையாக செலுத்தப்பட்டுள்ளது. இதை பெற்றுக்கொண்டதற்கான ரசீதை தனிக்கோர்ட்டு பதிவாளர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, சசிலாவின் வக்கீல்கள், இந்த ரூ.10.10 கோடி எங்கிருந்து திரட்டப்பட்டது, அதன் உண்மை தன்மை குறித்து எடுத்துக் கூறினர். இதையடுத்து சசிகலா செலுத்திய ரூ.10.10 கோடி அபராத தொகையை கோர்ட்டு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. இந்த தகவல் பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலா அபராத தொகையை செலுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளன. அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வருவது ஒன்று மட்டுமே பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு வழங்குவார் என்று கூறப்படுகிறது. சிறை விதிகளின்படி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் பொருந்தாது என்று கூறப்படுகிறது. ஆனால் சசிகலா விரைவில் விடுதலையாவார் என்று அவரது வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறி வருகிறார்.


மக்கள் கருத்து

ஆண்டவனுக்கு தெரியும்Nov 19, 2020 - 02:14:49 PM | Posted IP 162.1*****

அந்த பணம் எல்லாம் மக்கள் பணம் தான்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory