» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் கேரளா முதலிடம்.. தமிழ்நாடு 2ம் இடம் : நிதி ஆயோக் அறிவிப்பு!

வெள்ளி 4, ஜூன் 2021 10:33:13 AM (IST)



இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் கேரளா முதல் இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுக்க ஐநா அமைப்பில் உள்ள நாடுகளில் வளர்ச்சியை கண்காணிக்கும் வகையில் Sustainable Development Goals எனப்படும் வளர்ச்சி கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும், நாடுகளில் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.கடந்த 2018ல் இருந்து இந்த எஸ்டிஜி கணக்கீடு செய்யப்படும். பல்வேறு துறைகளில் நிலையான வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை இதை வைத்து நிதி ஆயோக் இந்தியாவில் கணக்கீடு செய்கிறது.

சுகாதாரம், கல்வி, மருத்துவம், தொழில்துறை, தனி நபர் வருமானம் என்று 13 இலக்குகள், 39 குறியீடுகள், 62 காரணிகளை மையமாக வைத்து இந்த கணக்கீடு செய்யப்படும். அதாவது ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள், எவ்வளவு கல்வி கொண்டு உள்ளனர், எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர். அவர்களின் சுகாதார மருத்துவ வசதி எவ்வளவு பூர்த்தி செய்யப்படுகிறது என்பதை மையமாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதில் கேரளா முதலிடம் பெற்ற நிலையில், இந்த வருடமும் கேரளா இதில் முதலிடம் பெற்றுள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கேரளா 75 புள்ளிகளையும், தமிழ்நாடு 74 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இமாச்சல பிரதேசமும் 74 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

52 புள்ளிகள் பெற்று பீகார் கடைசி இடத்தில் உள்ளது. 56 புள்ளிகளுடன் ஜார்க்கண்ட் பீகாருக்கு மேலே உள்ளது. 57 புள்ளிகளுடன் அசாம் ஜார்கண்டிற்கு மேலே உள்ளது. கடைசி மூன்று இடங்களில் அசாம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 79 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டெல்லி 68 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், லட்சத்தீவு 68 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த முறை மிசோரம் சென்ற ஆண்டை விட கூடுதலாக 12 புள்ளிகள் பெற்றுள்ளது, ஹரியானா 10 புள்ளிகளை பெற்றுள்ளது. உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா, குஜராத் மிசோரம், பஞ்சாப், ஹரியானா, திரிபுரா, டெல்லி, லட்சத்தீவு, ஜம்மு காஷ்மீர், லடாக், வேகமாக முன்னேறும் போட்டியாளர்களாக உள்ளனர்.

தனிப்பட்ட வகையில் தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு, டெல்லி வேகமாக முன்னேறி வருகிறது. குஜராத், டெல்லி இரண்டும் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. கேரளா சண்டிகர் இரண்டும் கல்வித்துறையில் நன்றாக செயல்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த எஸ்டிஜி புள்ளி 6 புள்ளிகள் உயர்ந்துள்ளது. கடந்த வருடம் 60 ஆக இருந்த புள்ளி இந்த முறை 66 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory