» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்திக் கொண்டால் 98% பாதுகாப்பு! ஆய்வில் தகவல்

சனி 3, ஜூலை 2021 5:52:11 PM (IST)

கரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வி்ல் தெரியவந்துள்ளது. 
 
இது தொடர்பாக நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பஞ்சாப் அரசுடன் இணைந்து முதுகலை மருத்துக் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (பிஜிஐஎம்இஆர்) நடத்திய ஆய்வில், கரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டவர்கள் தொற்று பாதிப்பின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து குறைந்தது 98 சதவீதம் தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது. 

எளிமையான இந்த ஆய்வுல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 4,868 காவலர்களில் 15 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதாவது 1000 பேருக்கு 3.08 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 35,856 பேர்களில் 9 பேர் மட்டுமே தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 1000-க்கு 0.25 பேர் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 42,720 காவலர்களில் 2 பேர் மட்டுமே தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதாவது 1000-க்கு 0.05 பேருக்கு மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பில் இருந்து 92 சதவீதம் தற்காப்பும், இரு தவணை தடுப்பூசியையும் செலுத்துக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து 98 சதவீதம் தற்காத்துக்கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை(சிஎம்சி) சார்பில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு 98 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது.  ​​தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 75 முதல் 80 சதவீதம் தொற்று பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அவசியம் எழவில்லை.

இதுபோன்ற தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவுகள் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு ஒரு உந்துதலையும், உத்வேகத்தை அளிப்பதுடன், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான தயக்கத்தை அகற்றுவதற்கும், தொற்று பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதற்கு உதவியாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே வந்துள்ளது. 

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். மூன்றாவது அலை வருவதும், வராமல் போவதும் நமது கையில் இல்லை. அதனை எதிர்கொள்வதற்கான தேவாயான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும்.  மக்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை முறையாக முழுமையாக கடைப்பிடித்தால் நிச்சயம் மூன்றாவது அலை வராமல் தடுக்க முடியும் என்று வி.கே.பால் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory