» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா 3-வது அலை அச்சுறுத்தல்: உயர்மட்ட நிபுணர் குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வெள்ளி 9, ஜூலை 2021 3:55:49 PM (IST)

கரோனா 3வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக்சிஜன் தேவை, இருப்பு, உற்பத்தி குறித்து  பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்தினார். 

கரோனா 2-வது அலை ஏற்பட்ட போது நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. எனவே அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஏராளமான நோயாளிகள் உயிரிழந்தனர்.

அதன் பிறகு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கூடுதல் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஏற்பாடு செய்தது. எனவே நிலைமை சீரானது. இப்போது 2-வது அலை ஓய்ந்து வருகிறது. இத்துடன் கரோனாவுக்கு முடிவு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அடுத்ததாக 3-வது அலை வரப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். அதற்கான அறிகுறிகளும் ஆங்காங்கே தென்படத் தொடங்கி இருக்கின்றன.

ஒருவேளை 3-வது அலை வந்தால் அதையும் நாம் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய, மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கின்றன.3-வது அலையின் போதும் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே 2-வது அலையில் ஏற்பட்ட தட்டுப்பாடு போல் அல்லாமல் எப்போதும் ஆக்சிஜன் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அந்த வகையில் ஆக்சிஜன் தேவை, இருப்பு, உற்பத்தி ஆகியவை பற்றி பிரதமர் நரேந்திரமோடி இன்று நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.போதுமான ஆக்சிஜனை இருப்பு வைத்திருப்பது, தேவைப்படும் போது உற்பத்தியை உடனடியாக செய்வது உள்ளிட்டவை பற்றி விரிவான ஆலோசனைகளை பிரதமர் வழங்கினார். 3-வது அலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் மோடி கடந்த 26-ந் தேதி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அதன் 2-வது கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory