» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: மத்திய அரசு சார்பில் கேவியட் மனுதாக்கல்!

செவ்வாய் 21, ஜூன் 2022 3:36:47 PM (IST)

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாகப் பணி புரிவதற்கான அக்னிபத் திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்துக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, 2022ஆம் ஆண்டுக்கு மட்டும் வயது உச்ச வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், முப்படைக்கும் நான்கு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆள்தோ்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் தாக்கல் செய்த அந்த மனுவில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாகவும், நாடாளுமன்றத்தில் முறையான ஒப்புதல் பெறாமலும், அரசிதழில் அறிவிக்கை வெளியிடாமலும் நூற்றாண்டு கால ராணுவத் தோ்வு முறையை மத்திய அரசு கடந்த ஜூன் 14-இல் மாற்றியுள்ளது. மேலும் முப்படைக்கான ஆள்சோ்ப்பு நடைமுறையில், இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு திணித்துள்ளது. இதை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேத விவரத்தை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுப் பிரிவை (எஸ்ஐடி) அமைக்கக் கோரி, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அக்னிபத் திட்டம் குறித்தும், இத்திட்டத்தால் தேசிய பாதுகாப்பு, ராணுவம் மீது ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், நிபுணா் குழு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory