» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவிலுக்கு முன்னால் மதுக்கடை : பா.ஜ.க. அரசுக்கு எதிராக உமா பாரதி நூதன போராட்டம்!

சனி 4, பிப்ரவரி 2023 10:22:17 AM (IST)



மத்திய பிரதேசத்தில்  கோவிலுக்கு முன்னால் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பா.ஜ.க. அரசுக்கு எதிராக உமா பாரதி நூதன போராட்டம் நடத்தினார். 

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியில் உள்ள அனுமன் மற்றும் துர்கா கோவிலுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி சென்றுள்ளார். கோவிலுக்கு முன்னால் மதுக்கடை ஒன்று அமைந்து உள்ளது.

இதுபற்றி உமா பாரதி கூறும்போது, கோவிலுக்கு முன்னால் மது கடையும், பாரும் உள்ளது என ஆவேசத்துடன் கூறினார். முதல்-மந்திரி என்னிடம் ஜனவரி 31-ந்தேதிக்குள் புதிய மது கொள்கை அறிவிக்கப்படும் என கூறினார். அந்த கொள்கைக்காக நான் இன்னும் காத்து கொண்டிருக்க முடியாது. மதுக்கடைகளில் நான் கோசாலைகளை தொடங்க போகிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது என்பது பெரிய விசயம் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதும், அவர்களது பிரச்சனைகளை கேட்டு தீர்ப்பதுமே அதன் நோக்கம் ஆகும் என கூறினார்.

இந்நிலையில், நிவாரி மாவட்டத்தில் ஆர்ச்சா நகரில் உள்ள மதுக்கடை ஒன்றின் முன்னால் பசுக்களை கட்டி வைத்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பின் மதுவை கை விட்டு, விட்டு பால் குடியுங்கள் என்று அவர் கோஷம் எழுப்பினார். கடந்த காலங்களில், மதுபானங்களுக்கு எதிரான தீவிர போராட்டங்களில் உமா பாரதி ஈடுபட்டு உள்ளார். கடந்த ஆண்டு மார்ச்சில் போபாலில் உள்ள மதுக்கடை ஒன்றின் மீது கல் ஒன்றை வீசி பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது, பசுக்களை கட்டிய அதே மதுக்கடையில் கடந்த ஆண்டு ஜூனில் பசுஞ்சாணம் கொண்டு வந்து வீசி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதனால், அவர் வருவது அறிந்ததும், மதுபான கடைக்காரர் கடையின் ஷட்டரை மூடி விட்டார். போன தடவை போன்று இந்த தடவையும் எதனையாவது தூக்கி வீசி விட போகிறார் என்ற பயம் ஏற்பட்டு விட்டது என கடையின் விற்பனையாளர் ராம்பால் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உமா பாரதி கூறும்போது, மக்களின் மதுபானம் குடிக்கும் விசயத்திற்கு தானும் ஒரு வகையில் பொறுப்பாளி என கூறினார். 2003-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டேன். அதனாலேயே, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது என கூறினார். இடையில், 2018-2020 வரையிலான 15 மாதங்கள் வரை காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory