» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒடிசா ரயில் விபத்து : பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு

சனி 3, ஜூன் 2023 5:24:21 PM (IST)



ஒடிசாவில் கோரமான ரயில் விபத்து நடந்த பஹானாகா பகுதிக்கு சென்று  பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த விபத்து நடந்தது. இந்நிலையில் தான் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே தான் சம்பவ இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். அதன்பிறகு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து ரயில் விபத்து குறித்து டெல்லியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி 4 மணிக்கு ஒடிசா சென்றார்.

டெல்லியில் இருந்து விமானத்தில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விபத்து நடந்த பஹானாகா பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் அங்கிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகளிடம் விபத்து குறித்து முக்கிய விபரங்களை அவர் கேட்டறிந்தார். ஆய்வின்போது பிரதமர் மோடி மிகவும் சோகமாக காணப்பட்டார். முகம் இறுக்கமாக இருந்தது. அங்கு தற்காலிக அமைக்கப்பட்ட கூடாரத்துக்கு சென்ற பிரதமர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மாநில சுகாதார மந்திரியுடன் பேசிய பிரதமர் மோடி, காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் இருந்து ஒடிசா, பாலாசோர் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory