» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாடு நிலச்சரிவில் மாயமான வளர்ப்பு நாய்: 6 நாட்களுக்கு பிறகு எஜமானருடன் சேர்ந்தது!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 11:21:44 AM (IST)
வயநாடு நிலச்சரிவில் மாயமான வளர்ப்பு நாய் 6 நாட்களுக்கு பிறகு எஜமானருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த மாதம் 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு புரட்டிப்போட்டது. இதில் வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. அங்கு வசித்த மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் காணாமல் போயினர்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். விலையுயர்ந்த பொருட்கள், உடைமைகள் ஆகியவற்றை உதறி தள்ளிவிட்டு தங்கள் உயிரை அவர்கள் காப்பாற்றி கொண்டனர். இதில் சோகம் என்னவென்றால் தாங்கள் ஆசை ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு பிராணிகளான ஆடுகள், பசுக்கள் ஆகியவற்றை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஏராளமான கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளின் உயிர்கள் பறிபோயின. இந்தநிலையில் வயநாட்டில் நிலச்சரிவின்போது உரிமையாளரை பிரிந்த வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவரிடம் இணைந்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டபோது ஒரு நாய் தன்னந்தனியாக உலாவிக்கொண்டு இருந்ததை பார்த்தனர். அது அவர்களை ஒன்றும் செய்யவில்லை. உணவு ஏதும் சாப்பிடவில்லை. அதனால் அது வளர்ப்பு நாயாக இருக்கலாம் என்பதை அவர்கள் யூகித்தனர். இதையடுத்து அந்த நாய் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு உரியதாக இருக்கக்கூடும் என்று கருதினர். பின்னர் அந்த நாயை மீட்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிக்கு கூட்டிச்சென்றனர்.
அப்போது அது திடீரென வாலாட்டிக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று ஒரு பெண்ணிடம் சென்றது. அதைப்பார்த்த அந்த பெண்ணும் தனது நாய் தன்னிடம் வந்துவிட்ட மகிழ்ச்சியில் அதை கட்டியணைத்துக்கொண்டார். நாயும் பதிலுக்கு அந்த முன்னங்கால்களால் பிடித்துக்கொண்டு பாசமழை பொழிந்தது. இந்த காட்சியை கண்ட மீட்புக்குழுவினர் நெகிழ்ந்துபோயினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.