» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை: கனிமொழி எம்.பி., பேச்சு!
செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 4:46:34 PM (IST)
தமிழ்நாட்டுக்கு வெள்ளப்பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு தொகையும் 7 மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று மக்களவையில் கனிமொழி எம்.பி., பேசினார்.
இன்று (06/08/2024) மக்களவையில் கேள்வி நேரத்தில் தூத்துக்குடி விவசாயிகளின் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு கோரிக்கைகள் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது.
இதனால் மாவட்டம் முழுவதும் விவசாய பயிர்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1.42 லட்சம் ஹெக்டேருக்கு மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முதல் கட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் காப்பீட்டுத் தொகையைத் தரவில்லை என திமுக எம்.பி. கனிமொழி புகார் தெரிவித்துள்ளார்.
2023 டிசம்பரில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பயிர்கள் சேதமடைந்தன. எனினும் பயிர்க் காப்பீடு செய்த தூத்துக்குடி விவசாயிகளுக்கு 7 மாதங்களாகியும் இதுவரை இழப்பீட்டுத் தொகை வரவில்லை. பயிர்க் காப்பீடு செய்தவர்கள் இழப்பீடு பெறும் முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் வறட்சியோ, வெள்ளமோ ஏற்பட்டால்தான் இழப்பீடு தரப்படும் என்ற விதியை தளர்த்தவும் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.