» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உயர் அதிகாரிகள் நேரடி நியமனம்: விளம்பரத்தை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு
புதன் 21, ஆகஸ்ட் 2024 10:42:03 AM (IST)
உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெறுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக குடிமைப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளில் அனுபவம் வாய்ந்தவர்களை அரசுத் துறைகளின் செயலர்கள், இணை செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், 10 இணை செயலர்கள், 35 இயக்குநர்கள் அல்லது துணை செயலர்கள் நிலையிலான 45 உயர் அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நேரடியாக நியமனம் (லேட்ரல் என்ட்ரி) செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நிபுணர்களை அரசுத் துறைகளில் நியமிப்பதுதான் இதன் நோக்கம்.
ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் (என்டிஏ) எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்த நடைமுறையால், இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படாது என்றும், ஏற்கெனவே பணியில் உள்ள எஸ்.சி.,ஓபிசி பிரிவு குடிமைப் பணி அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆளும் என்டிஏ கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறும்போது, "மத்திய அரசின் இந்த முடிவை எங்கள் கட்சி ஆதரிக்காது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், "மத்திய அரசின் உயர் பதவிக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்வது தலித், ஓபிசி மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் ஆகும். அரசியலமைப்பை அழிப்பதும் இடஒதுக்கீட்டை பறிப்பதும்தான் பாஜகவின் ராம ராஜ்ஜியமா” என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் என யுபிஎஸ்சி-யை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு, முந்தைய ஆட்சியின்போதும், இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நேரடி நியமனம் மூலம் சில உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) தலைவர் மற்றும் பல்வேறு அமைச்சகங்களில் செயலர் அந்தஸ்திலான பதவிகள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டன.
ஆனால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நமது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சமூக நீதி கோட்பாடுகள், குறிப்பாக இடஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்ப நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.
இதன்படி, இந்த விவகாரத்தை மறுஆய்வு செய்து சீர்திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை யுபிஎஸ்சி திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.