» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இயற்கைக்கு எதிராக செயல்பட்டதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்: கேரள உயர் நீதிமன்றம்

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:48:37 AM (IST)



இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட்டதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்’ என கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மாநில உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், சியாம் குமார் ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்தது.

அப்போது, மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்கான அரசின் தற்போதைய திட்டங்களை சுயபரிசோதனை செய்ய மாநில அரசை வற்புறுத்தவும், அது தொடர்பான கொள்கையை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்துவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இயற்கை வளங்களைச் சுரண்டுதல், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், இயற்கை பேரிடர்களைத் தடுத்தல், பேரிடர் மேலாண்மை மற்றும் தணித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பாக அரசின் தற்போதைய கொள்கைகளை கோர்ட்டு ஆய்வு செய்யும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவின்போது நீதிபதிகள் மேலும் கூறியதாவது: மனிதர்களின் அக்கறையின்மை மற்றும் பேராசைக்கு இயற்கை ஆற்றும் எதிர்வினைக்கு வயநாடு நிலச்சரிவு மற்றுமொரு உதாரணம். நீண்ட காலத்துக்கு முன்பே இதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. 

ஆனால் நாம் அவற்றை புறந்தள்ளிவிட்டு, நமது மாநிலத்தை பொருளாதார செழுமைக்கான உயர் பாதையில் கொண்டு செல்லும் என்று கருதி வளர்ச்சி செயல்திட்டங்களை தொடர்ந்தோம். இயற்கைக்கு எதிராக நாம் செயல்பட்டதே நிலச்சரிவுக்கு காரணம்.

2018 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த இயற்கை பேரிடர்கள், சுமார் 2 ஆண்டுகள் நீடித்த பெருந்தொற்று மற்றும் தற்போதைய நிலச்சரிவுகள் அனைத்தும் நமது பாதைகளின் தவறை வெளிப்படுத்தி உள்ளன. எனவே நாம் நமது வழிகளைச் சரிசெய்து, இப்போதாவது உறுதியான தீர்வு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒருவேளை அது மிகவும் தாமதமாகிவிடும்.

மாநிலத்தில் சுற்றுச்சூழல் ரீதியாக சிக்கல் நிறைந்த பகுதிகளை அடையாளம் காண உதவக்கூடிய நிறுவனங்களிடமிருந்து தகவல் சேகரிக்கவும், உதவி பெறவும் இந்த கோர்ட்டின் தலையீடு தேவை என்று உணரப்பட்டது. அதன்படி இந்த பொதுநல வழக்கின் இலக்கை 3 கட்டங்களாக அடைய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வயநாட்டில் நடைபெறும் மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை வாராந்திர அடிப்படையில் நாங்கள் கண்காணிப்போம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினார். பின்னர் இந்த வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory