» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லி அருகே போலி கால் சென்டர் நடத்தி மோசடி: 4 பெண்கள் உள்பட 20 பேர் கைது
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:11:59 AM (IST)
டெல்லி அருகே போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி அருகே உள்ள குருகிராமில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் போலி கால் சென்டர் நடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சைபர் கிரைம் பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள 3 வீடுகளில் கால் சென்டர் இயங்கி வருவது தெரியவந்தது.
3 வீடுகளிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் லேப்-டாப் மற்றும் செல்போனில் மிகவும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ‘ஹெட்போன்’ அணிந்து வாடிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது கால் சென்டர் நடத்துவதற்கான தொலைத்தொடர்புத் துறையின் உரிமம் அல்லது ஒப்பந்தம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் ஆன்லைன் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாக கூறி வெளிநாட்டினரை ஏமாற்றி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலி கால் சென்டர் நடத்தியதாக 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 செல்போன்கள், 16 லேப்-டாப்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.