» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு: 23 லட்சம் பேர் பயன்பெறுவர்!
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:15:28 AM (IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலாகும் இந்த திட்டத்தில் 23 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.
போலந்து மற்றும் உக்ரைன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார். டெல்லி வந்தவுடன் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் எடுக்கப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார். முழு ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்கான தகுதியாக பணி காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 25 ஆண்டுகளுக்கு குறைவாக அரசுப் பணியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஓய்வூதியத் தொகை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்படும்.
தற்போதைய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமும், மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவீதமும் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசின் பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில், சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் 3 குடைத் திட்டங்களைத் தொடர்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, இது ‘விக்யான் தாரா' என்ற ஒருங்கிணைந்த மத்தியத் துறை திட்டத்தில் இணைக்கப்பட்டது. கடந்த 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக் கமிஷன் காலத்தில் விக்யான் தாராவுக்கு ரூ.10,579 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சபை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.வி.சோமநாதன் கூறுகையில், தேசிய ஓய்வூதிய சந்தாதாரர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த புதிய திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள், நிலுவைத்தொகையுடன் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி ஓய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றார்.