» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் டாக்டர் கொலை: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:18:29 PM (IST)



மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர். வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சியினர், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 27) கோல்கட்டா, ஹவுராவில் தலைமை செயலகத்தை, ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட முயன்றனர். 'பெண் டாக்டர்கள் கொலைக்கு நீதி வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, மேற்குவங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் கவுரவ் பாட்டியா இன்று கூறும்போது, நாட்டில் சர்வாதிகாரி என யாரேனும் இருக்கிறார் என்றால் அது மம்தா பானர்ஜிதான். உண்மை வெளிவர வேண்டும். மம்தா பானர்ஜி மற்றும் காவல் ஆணையாளரிடம் சி.பி.ஐ. அமைப்பு, உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

உண்மையை வன்முறையை கொண்டு அடக்க முடியாது. இந்த நபர்கள் மாணவர்களை நசுக்க பார்க்கிறார்கள். அரசியலமைப்பை துண்டுகளாக கிழித்து போடுகிறார்கள். இதனை சகித்து கொள்ள முடியாது. இந்த விவகாரம் இன்று எழுப்பப்பட்டதுபோல், இன்னும் வலிமையாக எழுப்பப்படும் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory