» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பாலியல் புகார் : நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் விலகல்!
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:29:08 PM (IST)
நடிகைகள் பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்
கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 போ் அடங்கிய சிறப்புக் குழுவை கேரள அரசு ஞாயிற்றுக்கிழமை அமைத்தது.
நடிகைகள் ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு ஆகிய மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தில் (அம்மா) பொறுப்பு வகித்த பொதுச்செயலர் பதிவியை ராஜிநாமா செய்தார். அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் கலாச்சித்ரா அகாதெமியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், தற்போது அம்மா அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவருடன், நடிகர்கள் சங்கத்தின் பிற பொறுப்பாளர்களும் ராஜிநாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளால் நடிகர் மோகன்லால் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
காரணம், மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லாலுக்கு சித்திக்கின் பாலியல் தொல்லைகள் குறித்து தெரியாமல் இருக்குமா? இது தெரிந்தும் மோகன்லால் ஏன் இவ்வளவு நாள்களாக சித்திக் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இதைப்பற்றி எதுவும் தெரியாது என்றால் சக நடிகைகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறைகளைக்கூட அறியாத நடிகர் சங்கத் தலைவராக எதற்காக இருக்கிறார்? என பலரும் கேள்வியெழுப்பி வந்த நிலையில், மோகன்லால் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும், பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.