» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடத்தியவரை விட்டு, பிரிய மனமில்லாமல் தாயிடம் வர மறுத்த குழந்தை!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 12:24:24 PM (IST)



ராஜஸ்தானில் கடத்தியவரைவிட்டு, பிரிய மனமில்லாமல் தாயிடம் வர மறுத்து குழந்தை கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட ஒரு குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டது. ஆனால், தாயிடம் செல்ல மறுத்து கடத்தல்காரரை பிரிய மனமில்லாமல் கதறி அழ ஆரம்பித்தது. இருப்பினும், கடத்தல்காரரிடம் இருந்து குழந்தையை மீட்ட காவல்துறை அதிகாரி ஒருவர், தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையப் பகுதியில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிருத்வி என்ற 11 மாத குழந்தை காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, "குற்றம் சாட்டப்பட்டவர் விருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கு அருகில் ஒரு குடிசை வீட்டில் துறவியாக வசித்து வந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவரின் பெயர் தனுஜ் சாஹர், இவர் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர். இவர் உத்தரபிரதேசத்தின் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தார். ஆனால், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டார். தனுஜ் முன்பு உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாக பணியாற்றியவர்.

இதனால், அவருக்கு காவல்துறை நடைமுறைகள் நன்கு தெரிந்த நிலையில், அவர் மொபைல் போனை பயன்படுத்தாமல், அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றிவந்துள்ளார்.

அதேபோல, அவர் ஒருவரை சந்தித்தால் மீண்டும் அவரை சந்திப்பதை தவிர்த்துவந்துள்ளார். தனது அடையாளத்தை மறைக்க நீண்ட தாடி வளர்த்த அவர், சில நேரங்களில் அந்தத் தாடிக்கு வெள்ளை நிறம் பூசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், கடத்தப்பட்ட பிருத்வியை தன் மகனாகக் கருதி வளர்த்து வந்துள்ளார்.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி தனுஜ் சாஹரைக் கைது செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு மதுரா, ஆக்ரா, அலிகார் பகுதியில் விசாரணை நடத்தி, விருந்தாவனத்தின் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த தனுஜை கைதுசெய்ய காவல்துறை அதிகாரிகளும் துறவிகள் போல் உடையணிந்து, அப்பகுதியில் தங்கி, பக்தி பாடல்களை பாடி கண்காணித்து வந்துள்ளனர்.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனுஜ் அலிகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய காவல்துறையினர் வந்தபோது, ​​கடத்தப்பட்ட குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயன்றார். அவரை 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற காவல்துறையினர் அவரைப் பிடித்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தியவரை பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுத விடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory