» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெள்ளி 4, அக்டோபர் 2024 8:57:12 AM (IST)

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பள தொகையை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் பற்றி முடிவு செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்களை ஊக்கப்படுத்தி, செயல்திறனை மேம்படுத்த உதவும் வகையில் ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்திறனை பாராட்டி 78 நாட்கள் சம்பளத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தொகை ரயில் பைலட்டுகள், மேலாளர்கள், தண்டவாள பராமரிப்பாளர்கள், ஸ்டேசன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயின்ட்ஸ்மேன், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் குரூப் எக்ஸ்.சி. பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு துர்காபூஜை, தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டும் 78 நாட்கள் சம்பளம் 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனசாக வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.2 ஆயிரத்து 28 கோடி ஒதுக்கப்படுகிறது.

ரயில்வே துறையில் 2023-2024 ஆண்டில் 15 ஆயிரத்து 880 லட்சம் டன் சரக்கு கையாளப்பட்டு உள்ளது. 670 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். பெரிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர் வாரிய ஊழியர்கள்/ தொழிலாளர்களுக்கு, தற்போதைய உற்பத்தித்திறன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஆர்.) திட்டத்தை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு ரூ.200 கோடி வரை ஒதுக்கப்படுகிறது. சுமார் 20 ஆயிரத்து 704 ஊழியர்கள் பயனடைவார்கள். இதேபோல உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரதம மந்திரி ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் மற்றும் தன்னிறைவுக்கான உணவு பாதுகாப்பை அடைய கிருஷோன்னதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான மொத்த செலவினம் ஒரு லட்சத்து ஆயிரத்து 321 கோடியாக இருக்கும் என்று எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மத்திய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

மேலும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory