» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மனிதாபிமானமற்ற முறையில் இந்தியர்கள் நாடு கடத்தல் : நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!

வியாழன் 6, பிப்ரவரி 2025 12:33:29 PM (IST)

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து 100க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தது. 

அதில் நமது மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கவும், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களின் கண்ணியத்தைக் காத்திடவும் இந்த அவை இந்த விவகாரத்தை உடனடியாக கையாள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவையில் கேள்வி நேரம் தொடங்கியது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்வியுடன் மக்களவை கேள்வி நேரம் தொடங்கியது. என்றாலும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து 12 மணிக்கு விவாதிக்கப்படும் என்று சபாநாயர் ஓம் பிர்லா தெரிவித்தார். அடுத்து ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தண்ணீரின் தரம் குறித்து பாஜக எம்.பி., சுதீர் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் கோரினார். மேலும் இந்த விவகாரம் மற்றொரு நாட்டின் கொள்கை தொடர்பானது என்று தெரிவித்தார். 

அவரது கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், ஓம் பிர்லா அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory