» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போதைப்பொருள் வழக்கில் கைதான இந்திய வம்சாவளி வாலிபருக்கு தூக்கு தண்டனை நிறைவு

வெள்ளி 14, ஜூலை 2017 7:13:31 PM (IST)

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான இந்திய வம்சாவளி வாலிபருக்கு இன்று சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி வாலிபரான பிரபாகரன் ஸ்ரீவிஜயன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு மலேசியா நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். உட்லான்ட்ஸ் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் அவரது காரை மடக்கி பிடித்த போலீசார் காரினுள்ளே இரண்டு கவர்களில் டயாமார்பைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின்கீழ் சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிரபாகர ஸ்ரீவிஜயனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மற்றும் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அவரை இன்று தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சர்வதேச பொதுமன்னிப்பு சபையில் வழக்கு தொடர அவரது வழக்கறிஞர் மலேசியா நாட்டில் உள்ள மேல்முறையீட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இதுதொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணை இன்னும் முடிவடையாததால் இந்த தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது.

இன்னொரு நாட்டில் வழக்கு நடைபெற்று வருவதால் நமது நாட்டின் சட்ட விதிமுறைகளை புறக்கணிக்க முடியாது. ஒரு நாட்டின் நீதிமன்ற நடைமுறைகளில் மற்றொரு நாடு தலையிட முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் உள்ள சாங்கி சிறையில்  பிரபாகரன் ஸ்ரீவிஜயன்(29) தூக்கிலிடப்பட்டார்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாட்டு சட்டங்களின்படி 15 கிராமுக்கு அதிகமான அளவில் போதைப்பொருள் வைத்திருப்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. அப்படி சிக்குபவர்களை தூக்கிலிட்டுக் கொல்வதற்கு அந்நாட்டு குற்றப்பிரிவு சட்டங்கள் அதிகாரம் அளித்துள்ளன. எனவே, 22.24 கிராம் எடையுள்ள போதைப்பொருளுடன் பிடிபட்ட பிரபாகரன் ஸ்ரீவிஜயனுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory