» செய்திகள் - விளையாட்டு » உலகம்

லண்டனில் கன்டெய்னர் லாரி - மினி பஸ் மோதல்: தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பரிதாப சாவு

திங்கள் 28, ஆகஸ்ட் 2017 11:00:52 AM (IST)

லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில், பக்கிங்ஹாம்‌ஷயர் என்ற இடத்தில் எம்–1 நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.15 மணிக்கு 2 கன்டெய்னர் லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்தன. அப்போது அந்த நெடுஞ்சாலையில் நாட்டிங்ஹாமில் இருந்து வெம்பிளேவுக்கு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அந்த மினி பஸ் மீது 2 கன்டெய்னர் லாரிகளும் பயங்கரமாக மோதின. மோதிய வேகத்தில் அந்த மினி பஸ் அப்பளம் போல நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் மரண ஓலமிட்டனர்.

இந்த விபத்தால் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து முடங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசாரும், அவசரகால பணியாளர்களும் விரைந்து வந்தனர். அதற்குள், மினி பஸ்சை ஓட்டிய டிரைவர் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அவர்களில் 6 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மில்டன் கேனஸ், கவண்ட்ரி மற்றும் பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். 

அவர்களில் 5 வயது சிறுமி ஒருவர், ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விபத்தை ஏற்படுத்திய 2 கன்டெய்னர் லாரிகளின் டிரைவர்கள் ரிஸ்சார்டு மேசிராக் (31), டேவிட் வேக்ஸ்டாப் (53) ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரிஸ்சார்டு மேசிராக் அளவு கடந்த மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விபத்தில் சிக்கிய மினி பஸ்சில் சென்றவர்கள் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் தமிழ்நாட்டையும், ஒருவர் கேரளாவையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரில் 3 பேர் காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் மண்டப தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), இவரது தங்கை தமிழ்மணி (50), தங்கை கணவர் அறச்செல்வம் (60) ஆகியோர் ஆவார்கள்.

பன்னீர்செல்வத்தின் மகன் மனோரஞ்சன், லண்டனில் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர். இவர்களை பார்த்து விட்டு, அப்படியே ஐரோப்பாவில் சுற்றுலா மேற்கொள்வதற்காக பன்னீர்செல்வம், அவரது மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி, தங்கை கணவர் அறச்செல்வம் ஆகியோர் இங்கிலாந்து சென்றிருந்தனர். அவர்களுடன், லண்டனில் உள்ள பன்னீர் செல்வத்தின் மகன் மனோரஞ்சன், மருமகள் சங்கீதா ஆகியோரும் மினி பஸ்சில் சுற்றுலா சென்றிருந்தபோதுதான் விபத்தில் சிக்கி உள்ளனர்.

வள்ளி, மனோரஞ்சன், சங்கீதா ஆகியோருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல கண் மருத்துவர் டாக்டர் ஏ. சிவக்குமாரின் உறவினர்கள். விபத்தில் மரணம் அடைந்த பன்னீர்செல்வம், தமிழ்மணி, அறச்செல்வம் ஆகிய 3 பேரின் உடல்களை சொந்த ஊரான பிள்ளையார்பாளையம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் டாக்டர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4 பேர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மினி பஸ்சை ஓட்டி பலியான டிரைவர் பென்னி என்ற சிரியாக் ஜோசப், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து, சொந்தமாக மினிபஸ் வாங்கி அதை ஓட்டி வந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த விபத்தில் சிக்கி பாதித்துள்ள அனைவருக்கும் தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படுகிறது என லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory