» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்தை ஒடுக்க பிரிக்ஸ் நாடுகள் முடிவு: மாநாட்டில் தலைவர்கள் கூட்டு பிரகடனம்

செவ்வாய் 5, செப்டம்பர் 2017 12:46:57 PM (IST)பயங்கரவாதத்தை ஒடுக்க பிரிக்ஸ் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதத்தை ஆதரிப்போர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ சார்பில் வருடாந்திர உச்சி மாநாடு சீனாவின் துறைமுக நகரான ஷியாமென் நகரில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருடன் பிரதமர் மோடியும் இணைந்து கொண்டார். நேற்றைய மாநாட்டில் பயங்கரவாதம் தொடர்பான பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு ராஜ்ஜிய ரீதியிலான வெற்றி கிடைத்தது. 

இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பு பயங்கரவாதம் குறித்து ஷியாமென் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கேள்வி எதையும் எழுப்பாது என்று சீன வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து இருந்தது. அதே நேரம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் (கிழக்கு) செயலாளர் பிரீத்தி சரண் பிரதமர் மோடி நிச்சயமாக பயங்கரவாதம் பற்றிய விவகாரத்தை எழுப்புவார் என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி இதுகுறித்த கோரிக்கையை மோடி மாநாட்டில் முன்வைத்தார். இதை உறுதி செய்யும் விதமாக பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட 43 பக்க கூட்டு பிரகடனத்தில் பயங்கரவாதம் பற்றி கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் பயங்கரவாதம் என்ற சொல் பல்வேறு வடிவங்களில் 17 முறை இடம் பிடித்தது.

அந்த கூட்டு பிரகடனத்தில் கூறப்பட்டு இருந்ததாவது: இந்த பிராந்தியத்தில் இயங்கி வரும் தலீபான், சர்வதேச ஐ.எஸ். அல்கொய்தா, கிழக்கு துர்க்கிஷ்தான் ஐ.எஸ். இயக்கம், உஸ்பெகிஸ்தான் ஐ.எஸ். இயக்கம், ஹக்கானி நெட்வொர்க், லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ் இ-முகமது, தெஹ்ரிக் ஐ தலீபான் (பாகிஸ்தான்) ஹிஸ்ப் உத்-தாஹ்ரிர் ஆகிய குழுக்கள் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இதனால் இப்பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு நிலை மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

இதுபோன்ற பயங்கரவாத குழுக்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்தே ஆகவேண்டும். அனைத்து விதமான பயங்கரவாத செயல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் கண்டனத்துக்கு உரியவர்கள் ஆவர். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது, அதற்கான அமைப்புகளை உருவாக்குவது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் உலக சமூகத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனென்றால் பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவதில் பிரிக்ஸ் நாடுகள் முன்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் அதை பொறுப்புடன் தடுக்கவும் வேண்டும். இதில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவேண்டும். நாடுகளின் இறையாண்மை மற்றும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாமல் சர்வதேச சட்டவிதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். மற்ற நாடுகளும் பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதி ஏற்கும்படி வேண்டும். இவ்வாறு அந்த பிரகடனத்தில் கூறப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory