» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வட - தென் கொரியா நாடுகள் இடையே நல்லுறவை மேம்படுத்த முடிவு: ஏப்ரலில் இருதரப்பு மாநாடு!!

புதன் 7, மார்ச் 2018 5:23:23 PM (IST)தென் கொரியா மற்றும் வட கொரிய நாடுககள் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கான இருதரப்பு மாநாடு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கிறது.

வட கொரியா சென்று, அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னை திங்கள்கிழமைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் உய்-யோங் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் அந்த நாட்டுக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, அடுத்த மே மாத இறுதியில் இருதரப்பு மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள பான்முன்ஜோம் எல்லை கிராமத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.

இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அது வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் 3-ஆவது மாநாடு ஆகும். ஏற்கெனவே 2000 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் சமாதான மாநாடு நடைபெற்றது. வட கொரியாவுடனான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளித்த தென் கொரிய முன்னாள் அதிபர்கள் கிம் டே-ஜங் மற்றும் ரோ மூ-ஹுயுன் ஆகியோரது தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த இருதரப்பு மாநாட்டின்போது, தற்போதைய வட கொரிய அதிபரின் தந்தையும், அப்போதைய அதிபருமான கிம் ஜோங்-இல்லுடன் தென் கொரியா பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இருதரப்பு மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த 1950-ஆம் ஆண்டு முதல், 1953-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், அந்த ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியா வந்தார். மேலும், நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென் கொரிய அதிபருக்கு கிம் ஜோங்-உன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். இந்தச் சூழலில், தனது நல்லெண்ணத் தூதுக் குழுவை வட கொரியாவுக்கு அதிபர் மூன் ஜே-இன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தார்.

அப்போது, தென் கொரியகக் குழுவினருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-இன் விருந்தளித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். இது, சர்வதேச அளவில் அவர் மீதான நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பு மாநாடு குறித்த அறிவிப்பை தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் உய்-யோங் வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory