» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா - வட கொரியா அதிபர்கள் விரைவில் சந்திப்பு : ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு

வெள்ளி 9, மார்ச் 2018 4:38:43 PM (IST)

அமெரிக்கா மற்றும் வட கொரியா அதிபர்கள் சந்திப்பு வரும் மே மாதத்திற்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதை வடகொரியா வாடிக்கையாக வைத்துள்ளது. ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாம் அவ்வளவு தான் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மிரட்டல் விடுத்து வந்தார்.

வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐநா பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டுக்கு எதிராக விதித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியாவின் அடாவடி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க கடிதம் அனுப்பி உள்ளார். வடகொரிய அதிபரின் கோரிக்கைக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரை சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு இந்த தகவலை யோங் வெளியிட்டார். வரும் மே மாதத்திற்குள் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.

வடகொரியாவின் இந்த திடீர் மனமாற்ற முயற்சியை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன. அண்மையில், தென் கொரியா பிரநிதிகள் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து அணுஆயுத சோதனைகளை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தியது. இதனையடுத்தே வடகொரியா அதிபர் கிம் ஜாங், டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க ஒப்பு கொண்டதாக தெரிகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்களாக அச்சுறுத்தல்கள் நீடித்து வந்தன. இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இரு தலைவர்களின் சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory