» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் நீடிப்பார்: சட்டத்திருத்தம் நிறைவேறியது

திங்கள் 12, மார்ச் 2018 9:12:05 AM (IST)சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் நீடிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவி வகிப்பவர்கள் 2 முறைக்கு மேல் அப்பதவியில் நீடிக்கக் கூடாது என்ற அரசியலமைப்பு சட்டம், கடந்த 1982ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு சீனாவின் 7வது அதிபராக பதவியேற்ற  ஜி ஜின்பிங், மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார். ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான அவரது 2வது அதிபர் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு முடிய உள்ளது. 

ஆட்சி, ராணுவம் ஆகிய நாட்டின் முக்கிய தூண்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஜின்பிங் தலைமையில் சீனா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதனால், வாழ்நாள் முழுவதும் அதிபராக நீடிக்க ஜின்பிங் விருப்பம் கொண்டுள்ளார். இதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளது. 2 முறைக்கு மேல் அதிபர், துணை அதிபர் பதவி வகிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சட்டத் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் வழங்கியது. இதைத்தொடர்ந்து,  கடந்த வாரம் தொடங்கிய சீன நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு நேற்று நடந்தது. வாக்குச்சீட்டு முறையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. முதல் நபராக ஜின்பிங், தனது வாக்கை செலுத்தினார். இதைத்தொடர்ந்து, ஓட்டெடுப்பில் பங்கேற்ற 2,963 உறுப்பினர்களும் வாக்களித்தனர். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக 2,958 பேர்வாக்களித்தனர். எதிராக 2 வாக்குகளும், வாக்களிக்க விருப்பமில்லை என 3 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, ஜின்பிங்குக்கு ஆதரவான சட்டத்திருத்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம், 64 வயதாகும் ஜின்பிங் விரும்பினால், வாழ்நாள் அதிபராக பதவியில் நீடிக்க முடியும். 

சீனாவின் தலைசிறந்த தலைவரான மாசே துங்குக்கு பிறகு வாழ்நாள் அதிபராகும் முதல் தலைவராக ஜின்பிங் உருவெடுத்துள்ளார். இந்த அதிரடி மாற்றத்துக்கு ஆட்சியில் இருப்பவர்கள் ஆதரவு அளித்தாலும், உலக பார்வையாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரே கட்சியின் கீழ் ஆட்சி என்ற நிலையில் இருந்த சீனா, ஒரே நபரின் கீழ் ஆட்சி என்ற நிலைக்கு மாறி விட்டதாக கருதப்படுகிறது. மேலும், இது மன்னராட்சியைப் போன்று அமையும் எனவும் கணிக்கப்படுகிறது.  

இதே போல, துணை அதிபர் பதவிக்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி கூட ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளரான வாங் குஷானை கொண்டு வரவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சீன அரசியலில் 68 வயதுக்கு பிறகு பெரிய பதவிகளை வகிக்கக் கூடாது என்ற விதிமுறையும் உள்ளது. தற்போது வாங் குஷானுக்கு 69 வயதாகிறது. இவர் கடந்த 2013ல் ஊழல் தடுப்பு பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் நடந்த விசாரணையில், ஊழல் செய்ததாக 100 அமைச்சர்கள் உட்பட 15 லட்சம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, ஜின்பிங் தனது அமைச்சரவையை முற்றிலும் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் இது நடக்கக்கூடும்.

மாசே துங் யார்?

கடந்த 1949ல் மாசே துங் ஆட்சியை கைப்பற்றி சீன மக்கள் குடியரசை ஏற்படுத்தினார். அவரது தலைமையில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒற்றை கட்சி ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. 1976ம் ஆண்டு இறக்கும் வரையிலும், மாசே துங் சீனாவின் அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்தார். அவர் இறந்த பிறகு ஆட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதன் பின் சீனாவை உலக பொருளாதாரத்தின் வல்லரசு நாடாக மாற்றிய பெருமையை பெற்ற டெங் ஜியோபிங் கடந்த 1982ம் ஆண்டு, 2 முறைக்கு மேல் அதிபர் பதவியை யாரும் வகிக்கக் கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

இந்தியாவுக்கு தலைவலி

ஜின்பிங் வாழ்நாள் அதிபராக அதிகாரம் பெற்றது, உலகில் பல்வேறு நாடுகளுக்கு கவலை அளித்துள்ளன. குறிப்பாக, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இது நற்செய்தியாக இருக்காது என உலக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜின்பிங் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டோக்லாம் எல்லையில் சீன ராணுவம் 73 நாள் முகாம் அமைத்து பதற்றத்தை ஏற்படுத்தியது. 

மேலும், பாகிஸ்தானுடன் சீனா நட்பு பாராட்டி வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை மீறியும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சிறப்பு பொருளாதார மண்டல பாதை அமைத்து வருகிறது. மேலும், இந்தியாவை மீறி அரபிக்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தான், இலங்கையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது. எனவே, சீனா தனது போட்டியாக இந்தியாவை பார்க்கும் நிலையில் ஜின்பிங்கின் இந்த எழுச்சி பாதகமாகவே கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory