» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியவர்கள் மீது வலுவான பதிலடி கொடுப்போம்: டிரம்ப் அறிவிப்பு

புதன் 11, ஏப்ரல் 2018 12:46:27 PM (IST)

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவான, வலுவான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும், அதிபர் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் படைகள் தடை செய்யப்பட்டு உள்ள ரசாயன ஆயுத தாக்குதல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 7-ம்  தேதி, கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி நகரான டூமா நகரில் ஹெலிகாப்டரில் இருந்துபோட்ட பீப்பாய் குண்டில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட சரின் என்ற வாயு கசிந்தது.

இந்த ரசாயன ஆயுத தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு அதிபர் ஆதரவு படைகளும், ரஷிய படைகளும்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதை இரு தரப்பினரும் மறுத்து வருகின்றனர். ஆனாலும், இதற்கு முன்பு சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல்களின் முத்திரைதான் இந்த தாக்குதலிலும் உள்ளது என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக கூறுகின்றன. 

இதுபற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, "இதில் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் படங்கள், ஒட்டுமொத்த நாகரிக உலகின் மனசாட்சியை அதிர வைத்து உள்ளன. இந்த தாக்குதல்கள், பஷார் அல் ஆசாத் படைகள் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலின் பாணிதான் தெரிந்து உள்ளது” என கூறினார்.

சிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ தலைவர்களுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழுவினருடனும் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, "சிரியா ரசாயன ஆயுத தாக்குதலில் பதிலடி தருவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். ராணுவ ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு யோசனைகள் உள்ளன. நாம் எல்லோரும் பார்த்த இந்த வன்கொடுமைகள் இனியும் தொடர்வதை அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டார். 

மேலும் அவர் கூறுகையில், "நம்மால் இதைத் தடுத்து நிறுத்த முடியும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது விரைவான, வலுவான பதிலடி கொடுப்போம்” எனவும் அவர் சூளுரைத்தார். முன்னதாக நடந்த மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் டிரம்பிடம், "சிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதலுக்கு ரஷியா பொறுப்பேற்றால் என்ன செய்வீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப், "அவர் பொறுப்பேற்கலாம். அவர் பொறுப்பு ஏற்றால், நிலைமை இன்னும் கடினமானதாகி விடும்” என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கருத்து தெரிவிக்கையில், "இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, நிச்சயமாக வாஷிங்டன் தக்க பதிலடி கொடுக்கும்” என்று கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்று உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory