» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவுடன் ராணுவ வர்த்தக நடவடிக்கை வேண்டாம்: இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

சனி 9, ஜூன் 2018 10:23:38 AM (IST)

ரஷியாவுடன் ராணுவத் தளவாட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இதேபோன்று வேறு சில நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதைத் தொடர்ந்து இத்தகைய விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளை ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றின் விலை மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

வரும் அக்டோபர் மாதம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் பிரதமர் மோடி இடையே நடைபெறும் சந்திப்பின்போது இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ரஷியா மீது அமெரிக்கா சில பொருளாதாரத் தடைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விதித்தது. அதன்படி, எதிரி நாடுகளுக்கு பொருளாதாரத் தடை வாயிலாக பதிலடி தருவதற்கான சட்டம் (சிஏஏடிஎஸ்ஏ) அங்கு இயற்றப்பட்டது. அமெரிக்காவின் நேச நாடுகள் ரஷியாவிடம் ராணுவத் தளவாட ஒப்பந்தம் செய்வதற்கும் சில கட்டுப்பாடுகள் அதில் இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாக இந்தியாவின் ஏவுகணை கொள்முதல் நடவடிக்கையில் சிக்கல் எழ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரி டினா கைடனோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைச் சட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், ரஷியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்காவின் நேச நாடுகள் அனைத்தும் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பமல்ல. அதேவேளையில், அமெரிக்கா அமல்படுத்தியுள்ள சட்டத்துக்கு நேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory