» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வட கொரிய - அமெரிக்க அதிபர்கள் சிங்கப்பூர் வருகை: நாளை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு!!

திங்கள் 11, ஜூன் 2018 11:14:18 AM (IST)



அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று சிங்கப்பூர் சென்றனர். இரு தலைவர்களும் நாளை சந்தித்துப் பேசுகின்றனர்.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பொருளாதார தடைகளுக்கு இடையேயும் அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இது அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது.

இந்நிலையில்தான் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார். இது உலக அரங்கை அதிர வைத்தது.

பல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, ஒருவழியாக இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உச்சி மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகளை அமெரிக்கா, வடகொரியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளும் இணைந்து செய்து உள்ளன. இதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.36 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் ‘ஏர் சீனா போயிங் 747’ விமானத்தில் சென்று இறங்கினார். 2 நாட்களுக்கு முன்பாகவே அவர் சிங்கப்பூர் சென்று அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் அன்னை விமான நிலையத்தில் இந்திய வம்சாவளி தமிழரான சிங்கப்பூர் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். 30 வாகனங்களுடன் கூடிய வாகன அணிவகுப்புடன் கிம் ஜாங் அன் செயின்ட் ரெஜிஸ் ஓட்டலுக்கு சென்றார்.

கிம் ஜாங் அன்னுக்கு தேவையான உணவுப்பொருட்கள், அவர் உபயோகத்துக்கான சொகுசு கார்கள் வடகொரியாவில் இருந்து சரக்கு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்று அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.டிரம்பும், கிம் ஜாங் அன்னும் நாளை உச்சி மாநாட்டில் சந்தித்து பேசுவது வரலாற்று நிகழ்வாக மாறி உள்ளது. இதுவரை எந்தவொரு அமெரிக்க அதிபரும், வடகொரிய தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சி மாநாட்டில் சி.வி.ஐ.டி. என்று சொல்லப்படுகிற முழுமையான அணு ஆயுத கைவிடலுக்கு வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன் வந்து ஒப்பந்தம் செய்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையேயான போரை முறைப்படி முடித்து இரு நாடுகளும் சமரச ஒப்பந்தம் செய்து கொள்ளவும் இந்த உச்சி மாநாடு வழிவகை வகுக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த உச்சி மாநாடு, உலக அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து உருவாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory