» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் உருக்கமான கடிதம்: பெற்றோர்கள் கண்ணீர்!

சனி 7, ஜூலை 2018 5:56:38 PM (IST)தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்களும், அவர்களை அழைத்துச் சென்ற பயிற்சியாளரும், பெற்றோர்களுக்கு உருக்கமான கடிதங்களை எழுதியுள்ளனர்.

25 வயது பயிற்சியாளர் உட்பட சிறுவர்கள் தங்களது கைப்பட எழுதிய கடிதங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில், இதுபோன்ற ஒரு  அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக, பிள்ளைகளின் பெற்றோரிடம், மன்னிப்புக் கோருவதாக பயிற்சியாளர் கூறியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், அனைத்து பெற்றோருக்கும், உங்கள் பிள்ளைகள் தற்போது வரை நலமாக உள்ளனர். உங்கள் பிள்ளைகளை நான் மிக நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

குகையில் சிக்கியிருப்பவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை அளித்து வரும் மீட்புப் படை வீரர்களிடம் இந்த கடிதங்களை சிறுவர்களும் பயிற்சியாளரும் கொடுத்தனுப்பியுள்ளனர். அதில், அனைத்து உதவிகளுக்கும் நன்றி, உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. மீட்புப் படையினர் கண்டுபிடிக்கும் முன்பு 9 நாட்களாக குகைக்குள் தனது உணவையும், பிள்ளைகளுக்கே பகிர்ந்து கொடுத்து, இருட்டு குகைக்குள் பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பத்திரமாக பாதுகாத்து வந்த இளம் பயிற்சியாளருக்கு ஏற்கனவே பாராட்டுகளும், இந்த மழைக் காலத்தில் குகைக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற முட்டாள் தனத்துக்கு சில மக்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, பேவ் என்ற சிறுவன் தனது பெற்றோருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், அப்பா, அம்மா கவலைப்படாதீர்கள். இரண்டு வார காலமாக நான் உங்களுடன் இல்லை. விரைவில் மீண்டு வந்து நமது கடையில் பொருட்களை விற்பனை செய்ய உதவி செய்வேன் என்று கூறியுள்ளான். (அவனது பெற்றோர் வியாபாரம் செய்து வருகிறார்கள்). 

டாம் என்ற சிறுவன் எழுதியிருக்கும் கடிதத்தில், இங்கு நலமாக உள்ளோம், ஆனால் வானிலை தான் சற்று குளிராக உள்ளது என்று தெரிவித்துள்ளான். நான் குகையில் இருந்து வெளியே வந்ததும், எனக்கு கிரில்ட் போர்க் மற்றும் காய்கறிகளை வாங்கித் தருவீர்களா?, ஐ லவ் யூ அப்பா, அம்மா, எனது சகோதரி. என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நான் அனைவரையும் காதலிக்கிறேன் என்று பீரப்பத் என்ற சிறுவன் எழுதியுள்ளான்.

இந்த சிறுவனின் கடிதத்தைப் பார்த்த அவரது தாய் கதறி அழுதார். அவனது கடிதத்தையும், கையெழுத்தையும் பார்த்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அழுதபடியே கூறுகிறார் பீரப்பத்தின் தாய். அவன் பத்திரமாக இருக்கிறான் என்றால் போதும், நான் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் காத்திருக்கிறேன் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory