» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியது: டிரம்பின் பிடி தளர்கிறது.

வியாழன் 8, நவம்பர் 2018 11:27:35 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளதால் அதிபர் டிரம்பின் பிடி தளர்கிறது.

அமெரிக்க அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 2 ஆண்டுகளின் முடிவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையின் (மேல்சபை) மூன்றில் ஒரு பகுதியான 33 இடங்களுக்கும் தேர்தல் நடத்துவது வழக்கமான ஒன்று. அதிபரின் பதவிக்காலத்தின் மத்தியில் வருவதால் இடைக்கால தேர்தல் என்ற பெயரைப் பெற்றது. அந்த வகையில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. 

இது 2 ஆண்டு கால டிரம்ப் பதவிக்காலத்துக்கான பொது வாக்கெடுப்பாக அமையும் என கூறப்பட்டது. இந்நிலையில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தின் கீழ் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றி, குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை. ஆனால் ஜனநாயக கட்சி இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, 219 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது. குடியரசு கட்சி 193 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பதவி, ஜனநாயக கட்சிக்கு கிடைக்கும். இந்தப் பதவியை 2007-11 கால கட்டத்தில் வகித்த நான்சி பெலோசி மீண்டும் கைப்பற்றுவார் என தகவல்கள் கூறுகின்றன. இந்த வெற்றியை தந்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வாஷிங்டனில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும்போது, "உங்களுக்கு நன்றி. அமெரிக்காவில் நாளை புதிய நாளாக அமையும்” என குறிப்பிட்டார். பிரதிநிதிகள் சபை தேர்தலில் பெண்கள் பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளனர். 84 பெண் எம்.பி.க்கள் இருந்த சபையில், இம்முறை 100 எம்.பி.க்களை கடந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செனட் சபையில் ஏற்கனவே குடியரசு கட்சிதான் பெரும்பான்மை பெற்றிருந்தது. இப்போது 33 இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கு பின்னர் செனட் சபையை அந்த கட்சி தக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக கிடைத்த தகவல்படி குடியரசு கட்சிக்கு செனட் சபையில் தற்போது கிடைத்துள்ள இடங்களை சேர்த்து மொத்தம் 51 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு 45 இடங்களும் கிடைத்துள்ளன.

செனட் சபை தேர்தலில் குடியரசு கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். செனட் சபை தேர்தலில்தான் அவர் அதிக கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 105 ஆண்டுகளில், ஜனாதிபதி பதவியின் இடையில் வருகிற செனட் சபை தேர்தலில் ஜனாதிபதி சார்ந்துள்ள கட்சி 5 முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செனட் சபை தேர்தலில் ஜனநாயக கட்சி சில அதிர்ச்சி தோல்விகளையும் சந்தித்துள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் ஜோ டன்னல்லி இண்டியானாவிலும், கெய்தி கெயிட்காம்ப் வடக்கு டகோட்டாவிலும், கிளாரே மெக்கேஸ்கில் மிசவுரியிலும் தோல்வியை தழுவி உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுடன் 36 மாகாணங்களில் கவர்னர் பதவிக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயக கட்சி முக்கிய மாகாணங்களான மிச்சிகன், இல்லினாய்ஸ், கன்சாஸ் மாகாணங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றி உள்ளதால் அந்தக் கட்சியின் கை ஓங்குகிறது. டிரம்பின் பிடி தளர்கிறது.  டிரம்ப் நிர்வாகம், தொழில் சார்ந்த முடிவுகள், வருமான வரி விவகாரங்கள் தொடர்பாக ஜனநாயக கட்சியினர் விசாரணை நடத்த முடியும். எஞ்சியுள்ள 2 ஆண்டு காலம் டிரம்புக்கு போராட்டமாக அமையும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory