» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்: துபாயில் தொழிலாளர் முகாமுக்கு சென்றார் ராகுல் காந்தி!

சனி 12, ஜனவரி 2019 12:36:18 PM (IST)



அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தி துபாய் சென்றார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். விமான நிலையத்தில் துபாய் அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். ராகுல் காந்தியை கேரள முன்னாள் முதல்-அமைச்சர் உம்மன் சாண்டி வரவேற்று உரையாடினார். தொடர்ந்து ராகுல்காந்தி துபாயில் உள்ள சொகுசு ஓட்டலில் இரவு தங்கினார்.

நேற்று காலை 10.45 மணிக்கு துபாயில் ஒரு ஓட்டலில் இந்திய தொழில் அதிபர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி மற்றும் இந்திய தொழில் அதிபர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு கூட்டம் முடிந்ததும் துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ராகுலை காண காத்திருந்தனர். அந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தபடி ராகுல்காந்தி பேசியதாவது:-

இந்தியாவில் காங்கிரஸ் அரசு அமையும். அதிகாரம் நமது கையில் வந்ததும் முதல் வேலையாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இன்று துபாயை உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் முயற்சிகளில் பங்கெடுத்துள்ளர்கள். இங்கு பாருங்கள் உயரமான கட்டிடங்கள், மிகப்பெரிய விமான நிலையம், மெட்ரோ ரெயில் சேவை. இதெல்லாம் நீங்கள் இல்லாமல் வந்திருக்குமா?. இந்த நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இந்தியர்கள் பின்புலத்தில் உள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

அப்போது தொழிலாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். பிறகு தொழிலாளர்கள் வசிக்கும் அறைகளுக்கு சென்று ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்திய தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார். அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது, அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். பின்னர் மாலை 3 மணிக்கு பஞ்சாப் சமூக அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று இந்திய மக்களிடையே உரையாற்றினார். அப்போது காந்தி 150 ஆண்டுகள் மற்றும் இந்தியாவின் கருத்துகள் என்ற தலைப்பில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாற்றினார். ராகுல் காந்தியின் பேச்சை கேட்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரிக்கெட் மைதானத்தில் கூடி இருந்தனர். துபாய் ஜபீல் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை நடத்தினார்கள்.


மக்கள் கருத்து

ஒருவன்Jan 12, 2019 - 04:09:36 PM | Posted IP 141.1*****

ஆனால் உலகம் சுற்றும் கிழவன் மோடியோ கமெரா எடுக்க ஆட்களை கூட்டிட்டு போவார் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory