» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நியூசிலாந்தில் பயங்கரவாதியை பிடிக்க முயன்ற பாகிஸ்தான் நபருக்கு விருது: இம்ரான் கான் அறிவிப்பு!

திங்கள் 18, மார்ச் 2019 5:55:44 PM (IST)

நியூசிலாந்து மசூதிகளில் நடந்த தாக்குதலின்போது பயங்கரவாதியைப் பிடிக்க முயன்ற பாகிஸ்தான் நாட்டவருக்கு விருது வழங்குவதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் 

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்சர்ச் நகரிலுள்ள அல் நூர் மற்றும் லின் வுட் என்ற 2 மசூதிகளில் கடந்த வெள்ளியன்று துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பிரெண்டன் டாரண்ட் என்ற ஆஸ்ரேலிய நபர் இந்த செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின்போது, தாக்குதல் நிகழ்த்தியவரை நோக்கி ஒரு நபர் முன்னே சென்றதாகவும், அவரைப் பிடித்ததாகவும், அவர் இல்லாவிட்டால் மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும், அல் நூர் மசூதியில் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்திருந்தனர். சில பேரைக் காப்பாற்றியபோதும், அந்த நபர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர், கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனையில் மரணமடைந்தார். 

அவரது பெயர் மியான் நயீம் ரஷீத் என்றும், அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டது. இந்த தாக்குதலில் ரஷீத்தின் 21 வயது மகன் தல்ஹாவும் பலியானார். மசூதி தாக்குதலில் கொல்லப்பட்ட 9 பாகிஸ்தானியர்களில் நயீமும் ஒருவர். அந்நாட்டிலுள்ள அப்போட்டாபாத் எனும் நகரைச் சேர்ந்தவர். கிறிஸ்ட்சர்ச்சில் அவர் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அவரது மகன் தல்ஹா சிவில் என்ஜினியரிங் படித்துள்ளார்.

"அவர்கள் எப்போதும் செல்லும் மசூதிதான் அது. அந்த சம்பவம் ஏன், எப்படி நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், எனது கணவர் ஒரு நாயகன் என்று எனக்குத் தெரியும். அவர் எப்போதும் பிறருக்கு உதவ நினைப்பவர். கடைசித் தருணத்திலும், மற்றவர்களுக்கு எவ்வளவு உதவ முடியுமோ அவ்வளவு செய்திருக்கிறார்” என்று நயீம் மனைவி அம்ப்ரீன் தெரிவித்துள்ளார். நயீமின் தியாகத்தைப் பாராட்டி, இறப்புக்குப் பின் தரப்படும் பாகிஸ்தானின் உயர்ந்த தேசிய விருது அவருக்கு வழங்கப்படும் என்று, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ஆனால், அந்த விருதின் பெயரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory