» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் ஏய்ப்பு: வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

வியாழன் 21, மார்ச் 2019 10:53:33 AM (IST)

இந்திய வங்கியில்  ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் ஏய்ப்பு செய்துவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கினார். ஆனால் கடனைத் திருப்பிச் செலுத்த வில்லை.. இதுபற்றிய விசாரணை தொடங்குவதற்கு முன்பே நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்து உள்ளனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் ஒன்றை கடந்த 18ந்தேதி பிறப்பித்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல் உறுதியானது. இந்நிலையில், லண்டனில் நிரவ் மோடி புதனன்று கைது செய்யப்பட்டார்.

அவரை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கும்படி  நீதிமன்றத்தில் கோரப்பட்டது அந்த கோரிக்கையை மாவட்ட நீதிபதி மேரி மாலன் நிராகரித்தார். ஜாமீன் அளித்தால் மீண்டும் நிரவ் மோடி சரணடைய வாய்ப்பில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் அளிக்க முடியாது என நீதிபதி மேரி மாலன் தெரிவித்தார். நிரவ் மோடியை வரும் மார்ச் 29ம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிபதி மேரி மாலன் உத்தரவிட்டார்.

லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள நிரவ் மோடி இந்தியாவுக்கு வந்து சேர பல மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்காட நிராவ் மோடிக்கு சட்டபூர்வமான உரிமை உண்டு. எனவே அவர் தனது உரிமையை பயன்படுத்தி விஜய் மல்லையா போல பிரிட்டனில் நீதிமன்றத்தில் மனு செய்து தன்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது என்று வாதாடலாம். இந்நிலையில் அவர் தரப்பை விசாரித்த பிறகுதான் பிரிட்டன் உயர்நீதிமன்றம் நேரம் மோடியை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். எனவே தேர்தலுக்கு முன்னர் நிராவ் மோடி இந்தியாவுக்கு வந்து சேருவார் என்று உறுதியாகக் கூற இயலாது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory