» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இம்ரான் கானுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்த ஆலோசனை

ஞாயிறு 28, ஏப்ரல் 2019 9:18:57 PM (IST)சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அதிபர் ஜி ஜின் பிங் சந்தித்துப் பேசினார்.  இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதற்கு முயற்சி எடுக்க அவர் அறிவுறுத்தினார்.

இரு தலைவர்களும் தெற்கு ஆசியப் பகுதி நிலவரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்த சந்திப்பில் இந்தியா – பாகிஸ்ததான் உறவுகள் பிரதானமாக இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தியா – பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்தவும், உறவுகளில் நிலைத்தன்மையை  ஏற்படுத்தவும் இரு நாடுகளும் நெருங்கி வந்து பேச இயலும் என்று ஜி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்தார் என சந்திப்புக்குப் பிறகு சீனா அரசு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 25-ம் தேதி சீனாவுக்கு வந்தார். ஒரு லட்சம் கோடி டாலர் பட்டுப் பாதை திட்டம் குறித்து சீனத் தலைநகரில் 26, 27 தேதிகளில்  நடைபெற்ற 2-வது மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

இந்தப் பட்டுப் பாதை திட்டத்தின் முக்கிய பகுதியான சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி வழியாகச் செல்வதற்கு திட்டமிட்டிருப்பதால், இந்த மாநாடுகளில் பங்கேற்காமல் இந்தியா தவிர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி  14-ம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக பாலகோட் பகுதியில் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியது. இவ்வாறு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள பின்னணியில் ஜி ஜின்பிங்கும், இம்ரான் கானும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா.வில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகள் எடுக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்து சீனா தடை போட்டு வருகிறது. இம்ரான் கானுடன் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டதா என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும், இம்ரான் கான் வருகையைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினைக்கு வரும் வாரங்களில் தீர்வு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory