» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் இந்தியாவில் பயிற்சி? : இலங்கை ராணுவம் சந்தேகம்

சனி 4, மே 2019 5:04:38 PM (IST)

தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் இந்தியாவில் கேரளா, காஷ்மீரில்  பயிற்சி பெற சென்றிருக்கலாம் என இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகே தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்ந்த தொடர் தற்கொலைத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்து போனதாகவும், தாக்குதல் தொடர்பாக இந்தியா முன்கூட்டியே உளவுத் துறை தகவல்களை பகிர்ந்ததாகவும் இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகே முதன்முதலாக தெரிவித்துள்ளார். 

பிபிசி-க்கு அளித்த பேட்டியில் மகேஷ் சேனநாயகே தெரிவிக்கையில்,"இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் காஷ்மீர், பெங்களூரு, கேரளாவுக்கு சென்றுள்ளனர். இந்த தகவல்கள் தான் எங்களிடம் உள்ளது. காஷ்மீர் மற்றும் கேரளாவுக்கு அவர்கள் ஒரு சில பயிற்சிகளை மேற்கொள்ள சென்றிருக்கலாம் அல்லது மற்ற நாடுகளில் உள்ள அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள சென்றிருக்கக்கூடும்.       

இந்த தாக்குதலை செயல்படுத்தியவிதம் மற்றும் சந்தேகிக்கப்படும் நபர்கள் பயணம் மேற்கொண்ட இடங்களை பார்க்கும்போது, வெளியில் இருந்து யாரேனும் இதை வழிநடத்தியிருக்கக்கூடும்.  எங்களிடம் ஒரு சில தகவல்கள் மற்றும் உளவுத்துறை பகிர்வுகள் இருந்தன. ஆனால், இங்கு ராணுவ உளவுத்துறை ஒருபுறம் உள்ளது, மற்றவை ஒருபுறம் உள்ளது. இன்றைக்கு அந்த இடைவெளியை அனைவராலும் பார்க்கமுடிகிறது. இதற்கு, அரசியல் தலைமை உட்பட உளவுத் துறை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான அனைவரையுமே பழி கூறவேண்டும்.

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவிலான சுதந்திரம் மற்றும் அமைதி நிலவுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள். மக்கள் தற்போது அமைதியை அனுபவித்து வருகின்றனர். அதனால் தான் இலங்கை குறிவைக்கப்பட்டுள்ளது.  நாட்டில் மதக் கலவரங்கள், வன்முறைகள் ஏதும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காக ராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளோம். ராணுவப் படைகள் மற்றும் காவல்துறை  நாட்டை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது" என்றார். இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் காசர்கோட்டில்  இருவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த மாதம் சோதனை நடத்தியது நினைவுகூரத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory