» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெனிசுலாவின் வளங்களை அபகரிக்கவே அமெரிக்கா போர் மிரட்டல்: அதிபர் நிகோலஸ் குற்றச்சாட்டு

செவ்வாய் 7, மே 2019 4:26:38 PM (IST)

வெனிசுலாவின் தங்கம்,வைரம், பெட்ரோல் உள்ளிட்ட செல்வ வளங்களை அபகரிக்கப்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் மிரட்டல் விடுத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோ குறிப்பிட்டுள்ளார். 

வெனிசூலாவின் அதிபராக நிகோலஸ் மடுரோ கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எதிர்க்கட்சி, இந்த தேர்தல் முடிவை ஏற்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். ராணுவத்தினர் தங்களுக்கு ஆதரவாக இருந்து, மடுரோவை வெளியேற்ற போராடும்படி கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதியில் இருந்து வெனிசூலாவில் தொடர்ந்து போராட்டங்கள், வன்முறை என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஜூவான் குவைடோ-வை அமெரிக்கா உள்ளிட்ட 54 நாடுகள் ஆதரிக்கும் நிலையில், நிகோலஸ் மடுரோவின் அரசை ரஷியா, சீனா, பொலிவியா, துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ஆதரிக்கின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் குவைடோ வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாக பரவியது. 

முதல் முறையாக ராணுவ வீரர்களுடன் தோன்றி பேசிய அவர், அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை வீரர்கள் ஏற்றுக்கொண்டு, மதுரோவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்திருப்பதாகவும், மதுரோவை வெளியேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆயுதப்படையினர் மதுரோவிற்கு எதிராக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட கராகஸ் ராணுவ தளத்தின் அருகில், குவைடோவின் ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசாரும், ராணுவ வீரர்களும் கலைக்க முற்பட்டபோது கலவரம் வெடித்தது. 

இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து குவைடோவின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கராகஸ் நகரின் பல்வேறு பகுதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலவர தடுப்பு பிரிவு போலீசார் விரட்டியடித்தனர். ஆனால், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துவிட்டதாக அதிபர் மதுரோ தெரிவித்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உரையாற்றிய அவர், ராணுவத்தில் ஒரு சிறு குழுவினர் அரசைக் கவிழ்க்கும் முயற்சியாக வன்முறையில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் அமைதிக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தீவிர குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வெனிசுலாவில் நடைபெற்றும் வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் அங்குள்ள நிலவரங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதற்கிடையே இன்றும் அரசுக்கு எதிராக புதிய போராட்டங்களை முன்னெடுக்கும்படி குவைடோ அழைப்பு விடுத்துள்ளார். குவைடோவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

வெனிசுலாவில் அதிகரித்து வரும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு முடிவுகட்டும் வகையில் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார். 

வெனிசுலா விவகாரத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியம் உள்ளது. அதுதான் தேவை என்றால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும்  என்னும் நிலைப்பாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெள்ளத்தெளிவாக இருப்பதாக மைக் பாம்பியோ குறிப்பிட்டார். வெனிசுலா அரசியல் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையில் தொலைபேசி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வெனிசுலா மக்களுடன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய மைக் பாம்பியோ, உங்கள் உரிமையை நீங்கள் நிலைநாட்டும் வகையில் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுங்கள் என தெரிவித்தார். 

இந்நிலையில், நம் நாட்டின் மீது படையெடுக்க துடிக்கும் அமெரிக்காவின் மூர்க்கத்தனத்துக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள் என வெனிசுலா அதிபர் நிகோலஸ்  மடுரோ ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.  அமெரிக்கா என்றாவது ஒருநாள் இந்த புனிதமான நமது தாய்மண்ணை தொடுவதற்கு துணிந்தால் நமது தாய்நாட்டை காப்பாற்றும் வகையில் கைகளில் ஆயுதங்களை ஏந்தியபடி நீங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதேபோல், போட்டி அரசை நடத்திவரும் ஜூவான் குவைடோவும் ராணுவ முகாம்களுக்கு சென்று அவர்களின் ஆதரவை பெற பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இதற்கிடையில், வெனிசுலாவில் உள்ள பெட்ரோல் கிணறுகள் தங்கம், வைரம், உள்ளிட்ட செல்வ வளங்களை அபகரிக்கவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் மிரட்டல் விடுத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோ குறிப்பிட்டுள்ளார்.  ஆனால், வெனிசுலா மக்கள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். டிரம்ப்பின் இந்த பைத்தியக்காரத் தனமான நோக்கத்தை அனைத்து வகைகளிலும் கண்டித்து, தடுத்து நிறுத்த உலகநாடுகள் முன்வர வேண்டும் எனவும் மடுரோ வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

நிஹாமே 9, 2019 - 01:13:22 PM | Posted IP 172.6*****

அமெரிக்காவின் வேலையே அதுதானே.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory