» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மீண்டும் வர்த்தகப் போர் அபாயம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு பதிலடி கொடுக்க தயாராகும் சீனா!!

வெள்ளி 10, மே 2019 12:33:56 PM (IST)

டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறுக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி 20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

இதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அந்த இடைப்பட்ட காலத்தில் வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரி வெள்ளிக்கிழமை (இன்று) முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அத்துடன் பேச்சுவார்த்தையின்போது சீனா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் எனவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், சீனா துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இறுதிகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை உரிய பலனை அளிக்குமா என உலக நாடுகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory