» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயனர்களின் விவரங்களை கூகுள் எப்போதுமே விற்பனை செய்ததில்லை : சுந்தர் பிச்சை

சனி 11, மே 2019 4:32:53 PM (IST)

பயனர்களின் விவரங்களை கூகுள் எப்போதுமே விற்பனை செய்ததில்லை என்று அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பெருநிறுவனங்கள் பயனர்களின் தகவல்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதாக உலக அளவில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற தகவல் கசிவு விவகாரத்தில் ஏற்கெனவே பேஸ்புக் நிறுவனம் சிக்கி விசாரணையையும் சந்தித்துள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது பயனர்களின் விவரங்களை மற்றவர்களுக்கு எப்போதுமே விற்பனை செய்யாது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூ யார்க் டைம்ஸ் இதழில் சுந்தர் பிச்சை எழுதியுள்ள கட்டுரையில், "தகவல் தனியுரிமை என்பது அதிகப் பணம் கொடுத்து சேவைகளை பெறுவோர் மட்டும் பெறக்கூடிய ஆடம்பரப் பொருளல்ல. தற்காலத்தில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களில் தகவல் தனியுரிமை மிக முக்கியமானது. இன்றைய மக்கள் அனைவரும் அவர்களது தகவல்கள் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும், எப்படி பகிரப்பட வேண்டும் என்பது குறித்து அக்கறையுடன் இருக்கின்றனர்.

தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் உங்களது தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்ய நாங்கள் வழிவகை செய்துள்ளோம். கூகுள் எப்போதுமே மக்களின் தகவல்களை மற்றவர்களுக்கு விற்பனை செய்யாது. தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்.

ஒரே குடும்பத்தில் இணையத்தைப் பயன்படுத்துவோர் தங்களது குடும்பத்தினரிடமிருந்து தனியுரிமையைக் காக்க விரும்புவார்கள். டிஜிட்டல் கட்டணங்களை அனுமதிக்கத் தொடங்கும் ஒரு சிறு வணிகர் அவரது வாடிக்கையாளர் விவரங்களைப் பாதுகாக்க விரும்புவார். இளைஞர்கள் பகிர்ந்துகொள்ளும் செல்ஃபி, புகைப்படங்கள் போன்றவை அவர்களது தனியுரிமை. தனியுரிமை என்பது தனிப்பட்டது. ஆகையால்தான் மக்கள் அவர்களது தகவல்கள் சார்ந்த முடிவுகளை அவர்களே எடுப்பதற்கு நிறுவனங்கள் வழிவகை செய்ய வேண்டும்.

தனியுரிமை தொடர்பாகச் சட்டங்கள் இயற்றப்பட்டால் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் அதற்காக நாம் காத்திருக்க முடியாது. தனியுரிமை தொடர்பான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்தாலும் சரி, இந்தோனேசிய கிராமப்புறத்தில் படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி, அனைவருக்குமான தயாரிப்புகளையும் கூகுள் உருவாக்கிவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory