» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் கவலை இல்லை: டிரம்ப் சொல்கிறார்

திங்கள் 27, மே 2019 12:47:24 PM (IST)வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் தனக்கு கவலை இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன், 4 நாள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனிடா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று டோக்கியோவின் புறநகர் பகுதியான சிபா நகரில் உள்ள கோல்ப் மைதானத்துக்கு டிரம்ப் ஹெலிகாப்டரில் சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, தானே வாகனத்தை இயக்கி டிரம்ப்பை கோல்ப் மைதானத்துக்கு அழைத்து சென்றார். 

பின்னர் அங்கு கோல்ப் விளையாடிய இருதலைவர்களும் ஒன்றாக ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். அதே வேளையில் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்பும், பிரதமர் ஷின்ஜோ அபேவின் மனைவி ஏக்கி அபேவும், டோக்கியோவில் உள்ள டிஜிட்டல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். டீம்லேப் பார்டர்லெஸ் என்ற அந்த அருங்காட்சியகத்தில் வண்ண விளக்குகளை பார்வையிட்ட இருவரும், அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து, ரோகோகோகி கொக்கிகன் மல்யுத்த அரங்கத்தில் நடைபெற்ற கோடை கால மல்யுத்த போட்டியை டிரம்ப்-மெலனியா டிரம்ப் மற்றும் ஷின்ஜோ அபே-ஏக்கி அபே தம்பதியினர் பார்த்து மகிழ்ந்தனர். 

இந்த மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர் அசனாயமாவுக்கு, டிரம்ப் கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், இருநாட்டு உறவை பலப்படுத்துவது குறித்து ஷின்ஜோ அபேவுடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் வடகொரியாவின் அணுஆயுத விவகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பாக வடகொரியா அண்மையில் ஏவுகணை சோதனை நடத்தியது தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர், "வடகொரியாவின் சிறிய ரக ஆயுத சோதனை என் மக்களில் ஒரு தரப்பினரை கவலை அடைய செய்திருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை. வடகொரியா தலைவர் எனக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.  வடகொரியாவின் ஏவுகணை சோதனை ஐ.நா.வின் தீர்மானங்களை மீறும் செயல் என கூறி ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், வடகொரியாவின் ஏவுகணை சோதனை தன்னை கவலை அடைய செய்யவில்லை என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory