» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து ரத்து: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

சனி 1, ஜூன் 2019 5:46:07 PM (IST)

இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கி வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

The Generalized System of Preference என்ற இந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்து என்பது நீண்ட காலமாக வளரும் நாடுகளுக்காக அமெரிக்கா வழங்கிவரும் மிகப் பெரிய சலுகையாகும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக அந்தஸ்தின் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தன்னுடைய சந்தையில் அமெரிக்காவை சமமாகவும், நியாயமாகவும் அணுக இந்தியா அனுமதிக்கவில்லை என்று அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் 4ஆம் தேதியே குற்றம் சாட்டினார். இந்தியாவுக்கு வர்த்தக சலுகைகள் தரும் அதேநேரம், அமெரிக்காவுக்கு இந்திய சந்தைகளில் சமவாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிவித்த ட்ரம்ப், அதனால் இந்தியாவுக்கான முன்னுரிமை வர்த்தக அந்தஸ்தினை நீக்கப்போவதாகவும், இதற்காக 60 நாட்கள் அறிவிக்கை காலமாக இருக்கும் என்றும் அறிவித்தார். அதன்படியே அமெரிக்காவின் கெடு மே 3 ஆம் தேதியோடு முடிந்தது. ஆனால் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடந்துகொண்டிருந்ததால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்காத அமெரிக்கா... தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த கையோடு, இந்தியாவுக்கான முன்னுரிமை வர்த்தக அந்தஸ்தினை ஜூன் 5 ஆம் தேதி முதல் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க எம்.பி.க்கள் பலரும், ‘இந்தியாவுக்கான வர்த்தக முன்னுரிமையை ரத்து செய்தால் அமெரிக்க சந்தைக்கு ஆண்டு தோறும் முன்னூறு பில்லியன் டாலர் கூடுதல் செலவாகும், எனவே இந்த முடிவை தள்ளிப் போடலாம்’ என்று ட்ரம்புக்கு பரிந்துரை செய்தபோதும் அதை நிராகரித்த அதிபர், "இந்தியாவின் சந்தையில் அமெரிக்காவுக்கு உரிய சமவாய்ப்பும், அணுகல் தன்மையும் கிடைக்க இந்தியா எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை. அதனால் இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று சொல்லி எம்.பி.க்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

ஜிஎஸ்பி சலுகையின் மூலமாக தானியங்கி பாகங்கள், ஜவுளித் தொழில் சார்ந்த பொருட்கள் ஏராளமான அளவு அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி வந்தன. வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தின் மூலமாக அதிக அளவு பலன் பெற்று வரும் நாடாக இந்தியா இருந்து வந்தது. இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கை மூலம் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சந்தைகளுக்குமே பெரும் இழப்பு ஏற்படும் என்று பொருளாதார வட்டாரங்களில் கருத்துகள் எழ ஆரம்பித்திருக்கிறது. ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை குறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory