» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்கள் - 2ஆளுநர்கள் ராஜினாமா: இலங்கையில் பெரும் பரபரப்பு!

செவ்வாய் 4, ஜூன் 2019 11:58:09 AM (IST)இலங்கை அரசில் அங்கம் வகித்துவந்த 9 முஸ்லிம் அமைச்சர்களும் நேற்று (ஜூன் 3) ஒரே நேரத்தில் பதவி விலகியதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதியன்று இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 250க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய இலங்கை முஸ்லிம் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டதாக அரசு அறிவித்தது. பலரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் சிலருக்கும் இந்த குண்டுவெடிப்பில் பங்கு இருக்கிறது என்ற புத்த மத பிக்குகள் சிலர் சந்தேகம் கிளப்பினார்கள். இதன் உச்சகட்டமாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் புத்த பிக்குவுமான அதுரேலிய ரத்ன தேரோ கடந்த வெள்ளிக்கிழமை முதல் கண்டியில் இருக்கும் டாலடா மாலிகவா புத்தக் கோயிலுக்கு எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றைத் தொடங்கினார். அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஆளுநர்களாக இருக்கும் ஹிஸ்புல்லா, ஆசாத் சேலி ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதலோடு தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்கி, விசாரணைக்கு இடையூறின்றி நடக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் புத்த பிக்குவின் உண்ணாவிரதக் கோரிக்கை.

இதையடுத்து இலங்கை முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டது. பெரும்பான்மை பௌத்தர்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பிறகு இலங்கை முஸ்லிம் சமுதாயம் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், புத்த பிக்குவின் போராட்டம் இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியது. நேற்று காலை ஏற்கனவே முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட புத்த பிக்குகள் ஊர்வலமாகச் சென்று ரத்ன தேரோவை சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்தனர். கண்டியில் 10,000த்துக்கும் மேற்பட்ட பௌத்தர்கள் திரண்டு, முஸ்லிம்களை அதிகாரத்தில் இருந்து சிறிசேனா அப்புறப்படுத்தவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று எச்சரித்தனர். 

இதையடுத்து மேற்குறிப்பிட்ட இரு மாநில ஆளுநர்களும் ராஜினாமா செய்தனர். இந்தச் சூழலில்தான் நேற்று இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கேபினட் அமைச்சர்கள் உட்பட ஒன்பது அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கொழும்பில் அறிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் மேலும் பேசுகையில், "குண்டுவெடிப்புக்குப் பிறகு ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் வகையில் தொடர்ந்து மத, இன விரோத வன்முறைப் பேச்சுகளும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்தும் வகையில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுகிறோம். ஒரு மாத காலத்துக்குள் அரசு உரிய விசாரணை நடத்தி எங்களில் எவரேனும் குண்டுவெடிப்பு சம்பவத்தோடு தொடர்புடையவர் என்று நிரூபித்தால் கைது செய்யட்டும், தண்டனை தரட்டும். இல்லையென்றால் எங்களை நியாயவான்கள் என்று அறிவிக்கட்டும். இந்த விசாரணையை நடத்தும் முறைமையில்தான் இந்த அரசின் ஆயுளும் இருக்கிறது” என்று கூறினார்.

இலங்கை நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா செய்தது பற்றி அமைச்சர் மங்கள வீரா ட்விட்டர் பதிவில், "ஒரு வெறுப்புணர்வை இன்னொரு வெறுப்புணர்வு தணிக்காது. இன்று இலங்கைக்கு அவமானகரமான நாள்” என்று பதிவிட்டுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான சுமந்திரன், "இனவாதிகளால் ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியிருப்பது துரதிர்ஷ்டவமானது. நேற்று தமிழர்களான நாங்கள், இன்று முஸ்லிம்கள், நாளை இந்த இனவாதிகளால் பாதிக்கப்படப் போவது யாரோ? நாங்கள் முஸ்லிம்களின் பின்னால் நிற்போம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக முஸ்லிம் அமைச்சர்களும், முஸ்லிம் ஆளுநர்களும் பதவி விலகியிருப்பது இலங்கை வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory