» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடிக்கு மாலத்தீவு அரசு உயரிய விருது வழங்கி கவுரவம்: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஞாயிறு 9, ஜூன் 2019 9:46:12 AM (IST)மாலத்தீவின் உயரிய விருதான நிஷான் இஸ்ஸூதீன் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் இந்த உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

பிரதமர் மோடி தன் முதல் வெளிநாட்டு பயணமாக மாலத்தீவு சென்றார். விமானநிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் பிரதமர் மோடியை நேரில் விமானநிலையத்திற்கு வந்து வரவேற்றார். அதன்பின் மாலத்தீவின் ரிபப்ளிக் ஸ்கொயர் என்ற இடத்தில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் கலந்து கொண்டு பிரதமர் மோடியை வரவேற்றார்.

அதன்பின் மாலத்தீவின் பாதுகாப்பு படை வீரர்களின் மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ்க்கு உலக கோப்பையில் ஆடி வரும் இந்திய கிரிக்கெட் அணியினர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார். பிரதமர் மோடி தனது முந்தைய ஆட்சியின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பயணம் மேற்கொள்ளாத ஒரே தெற்காசிய நாடு மாலத்தீவு ஆகும். அதனால் பிரதமர் மோடியின் இந்த இரண்டு நாள் மாலத்தீவு பயணம் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் இருவரும் இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா – மாலத்தீவு இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடல் மற்றும் நீர் வளங்களை கணக்கிடுவது, சுகாதாரம், கொச்சி- மாலத்தீவு இடையே கடல்வழி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து துவங்குவது, இருநாடுகளின் சுங்கத்துறை இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, மாலத்தீவு ராணுவம் மற்றும் இந்திய கடற்படை இடையேயான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் மாலத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கடலோர கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் மாலத்தீவு ராணுவத்திற்கான பயிற்சி மையம் ஆகியவற்றை இரு தலைவர்களும் துவக்கி வைத்தனர்.

பிரதமர் மோடிக்கு விருது

மாலத்தீவில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிஷான் இஸ்ஸூதீன் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். மாலத்தீவு அரசின் உயரிய விருதை பெற்றபின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘‘இந்த விருதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.  இந்த விருது எனக்கான கவுரவம் மட்டுமல்ல. நம் இருநாடுகள் இடையே உள்ள நட்பு மற்றும் நல்லுறவுக்கான மரியாதை’’ என கூறினார். அவரது உரையின் விவரம் :

இரண்டாவது முறை பிரதமரான பின் எனது முதல் பயணமாக உங்கள் அழகிய நாட்டுக்கு வருவதில் பெருமையடைகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் மரியாதைக்கும் எனது நன்றிகள். உங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி கவுரவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மாலத்தீவு உடனான உறவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியா – மாலத்தீவு இடையேயான வலிமையான உறவு என்றும் நிலைத்து நிற்கும். மாலத்தீவுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை அதிகரிக்க செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாலத்தீவில் ரூபே கார்டுகள் வழங்கப்படுவதன் மூலம் இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாலத்தீவின் பாதுகாப்பு துறையை வலிமைப்படுத்துவது தொடர்பாக இருநாடுகள் இடையே ஆலோசனைகள் நடந்து வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதம் குறித்து பேசிய பிரதமர் மோடி பயங்கரவாதத்தில் நல்லது கெட்டது என எதுவும் இல்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் உலகின் மிக பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளன. பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம் என்று பிரதமர் மோடி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory