» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானை கடனாளியாக்கிய திருடர்களை விடமாட்டேன் : பிரதமர் இம்ரான் கான் உறுதி

வியாழன் 13, ஜூன் 2019 5:21:08 PM (IST)

பாகிஸ்தானை கடனில் மூழ்கவைத்த திருடர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசின் முதல் பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராத வகையில் நேற்று நள்ளிரவு பிரதமர் இம்ரான் கான் தொலைகாட்சி வழியாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அதன் விவரம்: பாகிஸ்தானின் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் கடன் பிரச்சனைதான். கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் தொகை 60 கோடி ரூபாயில் இருந்து 300 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தற்போது பாகிஸ்தானின் நிதி நிலைமை சீராக உள்ளது. இந்த தருணத்தில் நம் நாட்டை கடனாளியாக்கிய திருடர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளேன். அதிகாரம் கொண்ட உயர்மட்ட விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்படும். அதன் ஒரே இலக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தியவர்கள் பாகிஸ்தானின் கடன் தொகையில் எப்படி 240 கோடி ரூபாய் உயர்த்தினார்கள் என்பதை கண்டறிவது தான்.

இந்த கமிட்டியில் மத்திய புலனாய்வு துறை, புலனாய்வு பியூரியோ, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, பாகிஸ்தானின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் அனைவரின் மீதும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்படும். அவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது. என்னுடைய வாழ்நாள் முடிந்தாலும் இவர்களை விட மாட்டேன். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எனக்கு ஒரே ஒரு வாய்ப்பை வழங்கும்படி கடவுளிடம் வேண்டியுள்ளேன் என்று இம்ரான் கான் தெரிவித்தார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆட்சி செய்த ஆசிஃப் அலி ஜர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சியின் ஆட்சிகாலத்தில் தான் பாகிஸ்தானின் கடன் சுமை அதிகரித்ததாக இம்ரான் கான் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை (ஜூன் 10ம் தேதி) பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மேலும் நேற்று பஞ்சாப் மாகாணத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஹம்சா ஷெபாஸ் பண மோசடி வ்ழக்கில் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற முக்கிய தலைவர்களின் கைது நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆனால் எதை கண்டும் தான் பயப்பட போவதில்லை என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory