» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கா இன்னும் விரோதத்தோடுதான் உள்ளது : வடகொரியா குற்றச்சாட்டு

வெள்ளி 5, ஜூலை 2019 11:54:20 AM (IST)

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.

பரம எதிரி நாடுகளான அமெரிக்கா மற்றும் வட கொரியாவின் தலைவர்கள் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

ஆனால் இதுதொடர்பாக எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசினர். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் அணு ஆயுத பயன்பாடு குறித்த, இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை முடங்கிப்போனது. இந்த சூழலில் அரசு முறை பயணமாக தென்கொரியா சென்ற டிரம்ப், கொரிய நாடுகளின் எல்லையில் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்து பேசினார். 

இதன் மூலம் அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும்போது, வடகொரியா மண்ணில் கால் பதித்த முதல் தலைவர் என்ற பெருமையை டிரம்ப் பெற்றார். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் அணு ஆயுத பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா, பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும் அந்நாடு விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்துடன் இருப்பதாக வடகொரியா குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபைக்கான வடகொரியா தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி குறித்து 2017-ம் ஆண்டு எட்டப்பட்ட முடிவை வடகொரியா மீறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இதை காரணம்காட்டி வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது.

அக்கடிதத்தில் உறுப்பினர் நாடுகளில் உள்ள இடம் பெயர்ந்து வாழும் வடகொரிய தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அழைப்பு விடுத்திருந்த அதே நாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடிதமும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும். இதன் மூலம் வட கொரியாவுடன் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு தான் அமெரிக்கா இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. அதுவே நிதர்சனம். பிரச்சினைக்கு தீர்வுகாண்பதை காட்டிலும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்கிற எண்ணமே அமெரிக்காவுக்கு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory