» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாடு கடத்த உத்தரவு: இலங்கை தமிழர் குடும்பத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய நகரங்களில் பேரணி

திங்கள் 2, செப்டம்பர் 2019 5:15:48 PM (IST)நாடு கடத்த உத்தரவிடப்பட்ட இலங்கை தமிழர் குடும்பத்துக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய நகரங்களில் பேரணி நடந்தது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டுப்போர் முடிந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு வந்தனர். இந்தநிலையில் தமிழர்களான நடேசலிங்கம், பிரியா தம்பதியர் துன்புறுத்தலுக்கு பயந்தனர். இதன்காரணமாக பிரியா 2012-ம் ஆண்டும், நடேசலிங்கம் 2013-ம் ஆண்டும், தஞ்சம்கேட்டு அகதிகளாக ஆஸ்திரேலியாவுக்கு தனித்தனியே படகு மூலம் சென்று அடைந்தனர்.

அங்கே நடேசலிங்கம், பிரியா தம்பதியருக்கு கோபிகா (4 வயது), தருணிகா (2) என 2 மகள்கள் பிறந்தனர். ஆஸ்திரேலியாவில் தற்போது கடுமையான குடியேற்ற கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. படகுகளில் செல்கிற அகதிகளுக்கு தஞ்சம் தருவதில்லை. இந்த குடும்பத்தினருக்கும் அங்கு தஞ்சம் தர முடியாது என ஆஸ்திரேலிய அரசு மறுத்து விட்டது. இவர்கள் நாடு கடத்தப்படுவதற்காக கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஆஸ்திரேலிய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களை நாடு கடத்த அங்குள்ள கோர்ட்டு வரும் புதன்கிழமை வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் இவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஓரணியில் திரண்டு உள்ளனர். இந்த குடும்பத்தினர் விவகாரத்தை பிரதமர் ஸ்காட் மோரீசனிடம் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் அந்தோணி அல்பனீஸ் எடுத்துச் சென்றுள்ளார். இதுபற்றி சிட்னியில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "இவர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கப்பட வேண்டும். இது, நமது நாட்டின் குடியேற்ற கொள்கையை பலவீனப்படுத்தி விடாது. மாறாக சமூகம் சொல்வதை, வலுவாக சொல்வதை கேட்க தயாராக இருக்கும் அரசாங்கம் என்ற பெயரைத்தான் பெற்றுத்தரும்” என கூறினார்.

கிரீன்ஸ் கட்சி தலைவர் ரிச்சர்டு டி நடாலேயும், இந்த குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "இந்த குடும்பத்தினரை நாடு கடத்துவதற்காக தடுப்பு மையத்தில் வைத்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கொடூரமானது. இது முடிவுக்கு வரவேண்டும்” என கூறினார். உள்துறை நிழல் அமைச்சர் கிறிஸ்டினா கெனலி கூறும்போது, "இது பிரதமர் மோரீசனுக்கு கிறிஸ்தவ தலைமையை காட்டுவதற்கும், பைபிள் போதனைகளை பிரதிபலிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. உங்கள் இதயத்தை திறந்து, கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறதோ அதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினரை நாடு கடத்தக்கூடாது என்று கூறி, அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி மெல்போர்ன், சிட்னி உள்பட ஆஸ்திரேலிய நகரங்கள் பலவற்றிலும் பேரணிகள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிரியா, தானும் தனது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படாமல், குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிலோலாவில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பிச்செல்லும் நம்பிக்கையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory