» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி: பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம்

திங்கள் 23, செப்டம்பர் 2019 10:20:53 AM (IST)அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று அவர் ஹூஸ்டன் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் எரிசக்தி நகரம் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், டெக்சாஸ் மாகாணத்திலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம், அமெரிக்காவில் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள 4-வது நகரம் என்ற பெயர்களையும் பெற்றுள்ளது. இந்த நகரத்தில் 500 எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் உள்ளன. மேலும், இங்கு நாள் ஒன்றுக்கு 23 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்கிற 9 ஆலைகள் உள்ளன.

இந்த நகரில் முதல் நிகழ்ச்சியாக பீபி, எக்ஸான் மொபில், ஸ்குளும்பெர்கர், பேக்கர் ஹியூஸ், வின்மார் இன்டர் நேஷனல் உள்ளிட்ட 17 உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வட்ட மேஜை கூட்டம் ஒன்றை நடத்தினார்.இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரும் கலந்து கொண்டார்.இந்திய தரப்பில் பிரதமர் மோடியுடன் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ச வர்தன் சிரிங்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த 17 நிறுவனங்களும் உலகமெங்கும் உள்ள 150 நாடுகளில் 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.71 லட்சம் கோடி) நிகர மதிப்பினை கொண்டுள்ளன.

இந்த வட்ட மேஜை கூட்டத்தில் எரிசக்தி பாதுகாப்புக்காகவும், பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகளுக்காகவும் இந்தியாவும், அமெரிக்காவும் எப்படி இணைந்து செயல்படுவது என்பது குறித்த விவாதம் முக்கிய இடம் பிடித்தது. இந்தியாவில் தங்களது காலடித் தடங்களை மேம்படுத்துவது பற்றி விவாதித்த எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்த துறையில் இந்தியா கட்டுப்பாடு களை தளர்த்தி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டினர். இதற்காக அவர் கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். 

இந்திய, அமெரிக்க வர்த்தக உறவில் எரிசக்தித்துறை புதிய இடத்தைப் பிடித்துள்ளது.இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி முன்னிலையில் அமெரிக்காவின் டெல்லூரியன் நிறுவனத்துடன் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி), பங்கு முதலீடுகள் வாயிலாக இறக்குமதி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, டெல்லூரியன் நிறுவனம், அமைக்கவுள்ள டிரிப்வுட் எல்.என்.ஜி. ஏற்றுமதி முனையத்தில் இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனம் 2½ பில்லியன் டாலர் (சுமார் ரூ.17 ஆயிரத்து 750 கோடி) முதலீடு செய்யும்.40 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 50 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) டெல்லூரியன் நிறுவனம், இந்தியாவுக்கு வழங்கும். இதற்கான இறுதி ஒப்பந்தம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் கையெழுத்தாகும்.கூட்டத்துக்கு பின்னர் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், "முன்னணி எரிசக்தி நிறுவனங் களின் தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்பை பயனுள்ள விதத்தில் பிரதமர் மோடி முடித்துக்கொண்டார்” என கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஹூஸ்டன் நகருக்கு வந்து விட்டு, எரிசக்தி பற்றி பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லை. முன்னணி எரிசக்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் அற்புதமான கலந்துரையாடல் வாய்த்தது. எரிசக்தி துறையில் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். டெல்லூரியன் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி. நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது” என கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory